தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகம் சார்பில் கடந்த தேர்தலின்போது 4000 பேர் வாக்குரிமை பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த தேர்தலில் புதியதாக மேலும் 600 பேர் வாக்குரிமைக்காக பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் திருமண்டல தேர்தல் வாக்குரிமை கட்டணத்தை திருமண்டல நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 100 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயர்த்தியது.
இதன் காரணமாக நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில்
திருமண்டல உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்ட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் ஏற்கனவே வாக்குரிமை பெற்ற வாக்காளர்களை பல்வேறு காரணங்களை கூறி வாக்குரிமையை நீக்கி திருமண்டலத்தின் சார்பில் புதிய வாக்கு உரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் 600 ரூபாய் கட்டியும் வாக்குரிமை இழந்தது தொடர்பாக திருமண்டல உறுப்பினர்கள் காவல் துறையினர் மூலம் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் யோவான் ஆலய ஆயர் முன்பு உரிய விளக்கம் அளிக்கப்பட்டு எதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டன என்பது குறித்த காரணமும் தெரிவிக்கப்படும் என பேராலய நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
ஆனால் திருமண்டல நிர்வாகம் தரப்பில் எந்தவித விளக்கமும் கூறப்படாத நிலையில் நேற்று மாலை ஆயர் இல்லம் முன்பு பொதுமக்கள் கூடினர் ஆனால் நாசரேத் யோவான் ஆலய ஆயர் அண்ட்ரு விக்டர் ஞான ஒளி திடீரென ஓட்டம் பிடித்ததாக ஊர்மக்கள் கூறுகின்றனர்.
இதனால் மாலை 7 மணி முதல் நள்ளிரவு வரை நாசரேத் பேராலய ஆயர் இல்லம் முன்பு 50க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள், திருமண்டல உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.









