றி டி றிஏ பள்ளிகள் என்றால் ஒரு காலத்தில் நற்பெயரும் நன்மதிப்பும் உண்டு. தற்போது மூன்று மாணவர்களை பழிவாங்கிய சாப்டர் பள்ளியும் நூற்றாண்டு கல்வி சேவையில் நூறாண்டு கண்ட பள்ளிதான். ஒரு காலத்தில் வெளிநாட்டு மிஷனரிகள் தங்கள் சொத்துக்களை விற்றும் உறவினர்களிடம் நன்கொடை திரட்டியும் இத்தகைய கல்வி நிலையங்களை உருவாக்கினார்கள். அவற்றை நிர்வகிக்க ஜனநாயகபூர்வமான அமைப்பை ஏற்படுத்தினார்கள்.
அந்த நிர்வாக அமைப்பு நம்மவர்களிடம் வந்தபின்பு கல்வி நிலையங்களின் வருமானத்திலிருந்து தங்களுக்கு சொத்து சேர்க்க தொடங்கிவிட்டார்.
விளையாட்டு திடல் களையும் கூட குறுக்கி வணிக வளாகங்களை கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிக்க தொடங்கினார்கள். சில பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களையே விலை பேச முயன்றார்கள். மேரி சார்ஜெண்ட் பள்ளி மைதானம் கூட அப்படித்தான் விலை பேசப்பட்டு, நல்லவேளையாக மீண்டது.
டயோசீசன் தேர்தல் அரசியல் கட்சி தேர்தல் போன்று நடக்கிறது. பெரும்பாலும் செல்வந்தர்களே அதில் வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு வெற்றி பெறுபவர்கள் தங்கள் வருவாயில் சிறு பகுதியையாவது கல்வி, பொது சேவைக்கு செலவழித்தால் டயோசீசன் கல்வி நிறுவனங்களின் தரம் மேம்பட்டு இருக்கும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை.
சாப்டர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும் கடைகள் உண்டு. அதுமட்டுமின்றி, இங்கு தாளாளராக இருப்பவர் வியாபாரி சங்க தலைவர் என்பதால் மார்க்கெட்டையே மைதானத்திற்குள் கொண்டு வந்தார். அதை முன்னிட்டு தற்போது வரை விளையாட்டு மைதானம் சீர்கெட்ட நிலையில் உள்ளது. இதை பள்ளி தாளாளரும் உயர்கல்வி மேலாளரும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆனால் டயோசீசன் உயர்கல்வி மேலாளர், கடந்த காலத்தில் ஆரம்ப பள்ளிகளுக்கும் சேர்த்து போடப்பட்ட 180 அப்பாயிண்ட்மெண்ட் களைப் பற்றிய கவலையில் உள்ளார். பள்ளிகளை கண்காணிக்க அவருக்கு நேரமில்லை.
பள்ளி நிர்வாகத்தின் நிலை இப்படி என்றால், அரசுத்துறை நிலை மிகவும் மோசம். கல்வி அதிகாரிகள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், பொறியாளர்கள் போன்றவர்கள் ஆண்டுதோறும் பள்ளிகளை பார்வையிட வேண்டியது அவசியம். ஆனால் அவர்கள், கவர் தருகிற தலைமை ஆசிரியர், தாளாளர் அறைகளை மட்டுமே பார்வையிடுகின்றனர்.
இவர்கள் அனைவருமே மூன்று மாணவர்கள் இறப்புக்கும் காரணகர்த்தாக்கள். ஆகவே, இவர்கள் மீது கொலை வழக்கு அல்லது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்தால் மட்டுமே உயிர் நீத்த மூன்று மாணவர்களுக்கும் நீதி வழங்கியதாக அமையும்.
முக்கியமான செய்தி என்னவென்றால் பெரும்பாலான பள்ளிகளில் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே பாட இடைவெளிக்கு மத்தியில் கழிவறை செல்ல அனுமதிக்கின்றனர். அதனால் மாணவர்கள் நெருக்கியடித்துக் கொண்டு செல்லும் பொழுது இத்தகைய விபரீதங்கள் நிகழ்ந்தால் நிலைமை மேலும் மோசமாகி விடுகிறது.
அதுமட்டுமல்ல, சாப்டர் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 1400. அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறை வசதி இல்லை. இதைப் போலத்தான் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் கழிவறை வசதி இன்றி மாணவ மாணவியர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு இல்லை.
இதேபோல் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு உடல் நலம் பேணும் வகையில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. அவற்றையும் கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இரு மாணவர்கள் இறந்த நிலையில், உயிருக்கு போராடிய மாணவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்சுக்காக அதிக நேரம் காத்திருந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்கின்றனர். கார் வசதி கொண்ட ஆசிரியர்கள், உயிர் வதைத்த நிலையில் மருத்துவமனைக்கு மாணவரை கொண்டுசெல்ல தவறியிருந்தால் அது குற்றமே. ஏனெனில், பள்ளி வளாகத்தில் மாணவர் உயிர், உடைமைக்கு அவர்கள் பொறுப்பாளர் என்பதால் இது குறித்தும் காவல், வருவாய் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.