1964ல் பீம்சிங் இயக்கத்தில் வெளியான பழநி திரைப்படத்தில் 'அண்ணன் என்னடா...தம்பி என்னடா.. அவசரமான உலகத்திலே’ என்ற இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் இக்கொரனா யுகத்தில் உண்மையாகி வருவதைக் கண்கூடாக காணமுடிகிறது. கொரனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் அவர்களுக்குத் துணையாக இருப்பதற்கும் நெருங்கிய உறவினர்கள் கூட தயாராக இல்லை. கொரனா நோயாளி உயிர்த்துறந்தால் இறுதிச் சடங்குகளிலும் பங்கேற்க ஆளில்லை. மயானங்களுக்கும் பற்றாக்குறை.
இந்தியாவில் முதலாவது அலையின் போது கொரானா தொற்று பாதித்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தார்கள். எனவே, இந்த நோய் ஒருவரைத் தாக்கி இருந்தால், அது எங்கிருந்து வந்தது, எப்படி அவருக்கு வந்தது என்பதை ஆராய முடிந்தது. அந்த தொற்று தொடராதபடி அதன் சங்கிலியை உடைக்க முடிந்தது. ஆனால், இரண்டாவது அலை அவ்வாறு இல்லை.
சீனா போன்ற பெரிய நாடுகளிலும் வியட்நாம், தென்கொரியா, நியூசிலாந்து, கியூபா போன்ற சிறிய நாடுகளிலும் இன்னமும் இரண்டாம் அலை வரவில்லை. அந்த நாடுகளில் கொரனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டிருக்கின்றன. நம் நாட்டில் முதலாவது அலையை எளிதாக சமாளித்து விட்டோமென்று நினைத்து கட்டுப்பாட்டில் தளர்வுகள் தரப்பட்டது. மாநில தேர்தல்கள், அரசியல் கட்சிகளின் பரப்புரை, மதச்சடங்குகள் என அனைத்திலும் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைவிடப்பட்டது. விளைவாக இரண்டாம் அலை கொஞ்சம் பெரிதாகவே வந்திருக்கிறது.
இந்தியாவில் இரண்டாம் அலை மார்ச் 2021ல் வரத் தொடங்கியது. ஏப்ரல் 30க்குள் ஒரே நாளில் 4 லட்சம் நோய்த் தொற்றாளர்களைக் புதிதாகக் கண்டறிந்து, உலக அளவில் அதிக நோய்த் தொற்றாளர்கள் ஒரேநாளில் கண்டுபிடித்த நாடு என்பதில் இந்தியா முதலிடம் பிடித்தது. நோய்த் தொற்றில் ஆசியாவில் முதல் இடத்தையும் உலக அரங்கில் 2ஆம் இடத்தையும் பிடித்திருக்கிறது. கொரனா நோய் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கையில் உலக அளவில் 3ஆம் இடத்தில் உள்ளோம்.

சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அதிகாரிகள், சாமானியர்கள் என யாரையும் கொரனா விட்டு வைக்கவில்லை. நம் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் பலரையும் 2ம் அலையில் இழந்திருக்கிறோம்.
2ம் அலையின் முழு ஊரடங்கைத் தொடர்ந்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன. வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி இருக்கிறது, ஆங்காங்கே வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும் சாராயம் காய்ச்சுவதும் தீவிரமாகிவிட்டன. கொரனா நோயாளிகள் மனச்சிதைவுக்கு ஆளாவதும் தற்கொலை சம்பவங்களும் தொடர்கின்றன.
ஆனால், எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயம் என்பது போன்று வியாபாரிகளில் சிலரும் பொதுமக்கள் சிலரும் மனசாட்சியை அடகுவைத்து செயல்படுகின்றனர். கொரனா உயிர்காக்கும் மருந்தான ரெம்சிடெசிவிரும், பிராணவாயுவும் ஆக்சிமீட்டரும் கள்ளச் சந்தையில் பல மடங்க விலைக்கு விற்கப்படுகிறது. காய்கறிகள், பழங்கள் இளநீர், முட்டை உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் முதல் மயானத்திற்கு கொண்டு செல்லும் ஊர்திகள் வரை கட்டணக் கொள்ளை கட்டுப்பாடின்றி நடக்கிறது.

இந்நிலையில் கருப்புப் பூஞ்சை என்ற அடுத்த தொற்று நோயை எதிர்கொள்ள நாம் தயாராகி கொண்டிருக்கிறோம். கொரனா நோய் சங்கிலி உடைக்கப்படவில்லை என்றால் 3ஆம் அலை நாம் நினைத்துப்பார்க்க முடியாத அழிவை ஏற்படுத்தும். இன்று நாம் உயிரோடிருப்பது உலக அதிசயம் என்று எண்ணும் நிலை உருவாகிவிடும்.

முனைவர் டி.ஏ.பிரபாகர்,
வழக்குரைஞர், திருநெல்வேலி














