நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சிக்குட்பட்ட பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தமிழக சட்ட மன்ற சபாநாயகர் அப்பாவு , நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு , உதவி ஆட்சித் தலைவர் பிரதிக் தயாள் ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். பின்னர் பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பதற்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வாகனத்தை சபாநாயகர் கொடியசைத்து இயக்கிவைத்தார்.

திசையன்விளை பேரூராட்சி மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் விநியோகம் செய்வதற்கான நடமாடும் காய்கறி வண்டியில் இரு பெண்களுக்கு காய்கறிகளை வழங்கி விற்பனையை தொடக்கி வைத்தார்.

தாசில்தார் ரஹ்மத்துல்லா,சிறப்பு தாசில்தார் சுப்பராயலு,ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை நகர செயலாளர் ஜாண் கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.








