ஊரடங்கில் சுற்றியவர்களை அஞ்சலட்டை எழுதி அவர்கள் வீட்டுக்கே அனுப்பவைத்த போலீசார்

0
1157

கொரோனா முழுஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு அத்யாவசிய தேவைகளுக்கு சாலைகளில் பயணம் செய்யக்கூட இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் 23 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது.

இன்று ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித் திரிபவர்களை நிறுத்தி நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான காவலர்கள் இ-பதிவு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தனர்.முறையாக எந்த ஆவணங்களும் இல்லாமல் சாலைகளில் சுற்றிதிரிந்தவர்களை சாலையிலேயே தனிமனித இடைவெளியுடன் நிறுத்திவைத்து,’ சாலைகளில் தேவையில்லாமல் சுற்றமாட்டோம், நோய் தொற்றை பரப்பமாட்டோம்’ என உறுதி மொழி எடுக்க வைத்தனர். மேலும், ‘குடும்பத்தின் பாதுகாப்பிற்காக வீட்டிலேயே இருப்போம்’ என்று அஞ்சலட்டையில் என்ற வாசகம் எழுதவைத்து, அவர்களது வீட்டுக்கே அனுப்பி வைத்து நூதன தண்டனையும் வழங்கினர்.

அதுமட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் தொலைபேசி எண்ணைப் பெற்று , நோய் பற்றி கூறி எடுத்துரைத்து, ’இனி அவர்களை வெளியே சுற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்ரீநிவாசன் ’தேவையின்றி சாலைகளில் இபதிவு ஆவணங்கள் இல்லாமல் சுற்றி வருபவர்கள் முதல் நாள் என்பதால் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’ எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here