நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு , உள்நாட்டு பறவைகள் குவிந்துள்ளன. குளத்தில் தண்ணீர் இருப்பதால்,அங்குள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சுபொரித்து புதிய வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கியுள்ளது.தாய் பறவைகள் இங்குள்ள குளங்கள், மற்றும் அருகில் உள்ள கடல் பகுதிக்குச் சென்று இரைகளை எடுத்து வந்து தங்களது குஞ்சுகளுக்கு ஊட்டும் அழகு ரசிக்கத் தக்கதாக இருக்கிறது .
இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ரஷ்யா, சைபீரியா. பிரான்ஸ், ஆஸ்திரேலியா நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பின்டைல் ,பிளாக்விங்டு, கிரேகிரேன் , கிரின்சங், கார்கனி, பிளமிங்கோ என ஏராளமான பறவைகளும் , வெள்ளை அரிவாள் மூக்கன், பெலிக்கான், நீர்காகம், நாமக்கோழி, நீர்வாத்து, கூழக்கடா, சாம்பல் நாரை என உள்நாட்டு பறவைகளும் இனப்பெருக்கத்திற்காக வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் வரை இங்கு வந்து தங்குகின்றன.
இந்த ஆண்டு கூந்தன்குளம் பறவைகள் சரணாயல சீசன் களைகட்டியுள்ளது. திரும்பும் திசை எல்லாம் பறவைகளின் வசிப்பிடங்களாக மாறியுள்ளது. ஊர் மக்களும் பறவைகளின் பாதுகாவலராக இருந்து காத்து வருகின்றனர்.
மணிமுத்தாறு அணையில் இருந்து வருடம் முழுவதும் குளத்திற்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் தனியாக நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும். சுற்றுலாப்பயணிகள் வந்து, செல்ல போதிய பேருந்து வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்தால் சிறந்த சரணாலயமாக மாறும். சுற்றுலாப்பயணிகள் கூட்டமும் அதிகரிக்கும் என பகுதி மக்கள் கூறுகின்றனர்.








