மகாராஷ்டிராவில் யாரோ அஸ்திவாரம் போட, யாரோ வீடு கட்டிய கதையாக, சிவசேனா தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டுடன் பதவியேற்க திட்டமிட, தேசியவாத காங்கிரசை பிளந்து, சரத் பவாரின் மருமகன் அஜித் பவாரை துணை முதல்வராக்கி ஆட்சி அமைத்துவிட்டது. தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக முடிசூட்டிக்கொண்டார். திட்டமிடாமலும், முறையாக அறிவிக்கப்படாமலும் ரகசியமாக நடந்த அந்த பதவியேற்பு விழாவை தலைவர்கள் பலரும் தொலைக்காட்சியை பார்த்தே தெரிந்துகொண்டனர்.
சரத் பவார் 5 எம்.எல்.ஏக்களை தவிர மற்றவர்களை மீட்டெடுத்து விட்டார். அனைவரையும் நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்துள்ளார்.
ரகசிய பதவியேற்புக்கு எதிராக, சிவசேனா,காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அஜித் பவார் சட்டமன்ற குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஆவணம் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு வாதிடப்பட்டது. நீதிபதிகள் வழக்கை விசாரித்து நாளை ஒத்திவைத்தனர்.














