கோவில்பட்டியில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் இல்லாததால் உயிராபத்து இல்லை எனினும், தீ பரவ அதுவே காரணமாகிவிட்டது. தீ பற்றியெரிந்த நிலையில் அப்பக்கமாக வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் எட்டயபுரம், விளாத்திக்குளம், கழுகுமலை, கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் முயற்சித்தாலும் தீ 3 மாடிகளையும் பற்றிவிட்டது. எரிந்த துணிகளின் மதிப்பு ரூ.2கோடி என கூறியுள்ளனர்.
கோவில்பட்டியில் சென்னை சில்க்ஸ் அடியெடுத்துவைத்தது தனிக்கதை. முதலில் மண்படம் ஒன்றை பிடித்து தனது பிற கிளைகளில் இருந்த ஜவுளியை சலுகை விலையில் விற்றது. இது கடை வைத்து வணிகம் செய்தவர்களை பாதித்ததால் அவர்கள் போராடும் முடிவுக்கு வந்தனர். ஒருவழியாக, கடை வைத்து வணிகம் செய்தால் சரி என்று முடிவாகி, ஏற்கனவே பிரபலமாக இருந்த திலகராஜ் கடையை பிடித்து வியாபாரத்தை கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு தொடங்கியது. தற்போது தீபாவளி முடிந்த இரு நாட்களில் தீவிபத்து நடந்துள்ளது.
இந்த தீபாவளிக்கு கடை வியாபாரம் ‘டல்’ என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் பல கடைகளோடு இந்த கடையின் ஒரு பகுதியும் அடங்கியுள்ளது. இந்நிலையில், கடையில் பற்றிய திடீர் தீயால் கோவில்பட்டி மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.
மேலும், கடந்த 2015 சேலம், 2017 சென்னை, 2018 விழுப்புரம் இப்போது கோவில்பட்டி என தொடர்ந்து சென்னை சில்க்ஸ் கடைகளில் தீப்பற்றுவது தொடர்கிறது.
சென்னை தி.நகர் விபத்தில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள், நகைகள் எரிந்து நாசமானதாக கூறப்பட்டது. அப்போது ‘சென்னை சில்க்ஸ் தீ விபத்து உண்மை விபத்தா? வியாபார போட்டியால் ஏற்பட்ட நாச வேலையா? தமிழகஅரசு உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று விஜயகாந்த் ‘ட்வீட்’ போட்டார்.
2018ல் விழுப்புரத்தில் உள்ள சென்னை சில்க்சில் தீப்பிடித்தது. அதுவும் திறப்பு விழா நடந்த சிறிது காலகட்டத்துக்குள் நடந்தது.
இப்படி தொடர்ந்து தீவிபத்து நடப்பதால் காப்பீட்டுத்தொகை கிடைக்கிறதோ, இல்லையோ, வியாபாரம் குறைவதற்கு இதுவே காரணமாக அமைந்துவிடுவதை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் உணர்வதாக தெரியவில்லை. ஒரு பெரிய கடைக்கு பொருள் வாங்க சென்றால் வாடிக்கையாளர் பாதுகாப்பாக உணரவேண்டாமா?
அதுமட்டுமல்ல, நகை, துணியெல்லாம் நல்ல நாள்களுக்கும், திருமணம் போன்ற சுப காரியங்களுக்கும் வாங்குகிறார்கள். இப்படி தீ எரிவது தீச்சகுனம் என்று கருதி வாடிக்கையாளர்கள் இப்போது சென்னை சில்க்ஸ், குமரன் நகை கடைகளுக்கு போலவே தயங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதும் உண்மை.















