ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க அதிகாரிகள், அமைச்சர்கள் முகாமிட்டனர். ஏழு குழுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்முயற்சியில் ஈடுபட்டனர். இறுதியாக என்.எல்.சி, ஒஎன்ஜிசி நிறுவனங்களின் முயற்சி. இடையே, தமிழக மக்களின் கண்ணீர் கதறல்கள். வளையவரும் ‘சேவ் சுஜித்’ ஹேஸ்டேக்குகள். இந்த உச்சுக்கொட்டல்கள் மட்டும் இத்தகைய துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமா?
ஏனெனில், இது 2009 முதலாக தமிழகத்தில் நடக்கும் 14ஆவது சம்பவம். ஒவ்வொரு முறையும் ஆற்றாமை, அனுதாபம், ஆறுதல்தான் தீர்வு என்றால் அரசு எதற்கு?
ஆழ்துளையில் சிக்குவோரை மீட்க இதுவரை அதிநவீன இந்திரங்கள் கருவி இல்லை. ஏதோ, வட இந்தியாவில் இருக்கிறதாம். இங்கே நாமக்கல் வெங்கடேசன், கோவில்பட்டி மணிகண்டன் என தனியார்கள் தயாரித்த ஒரு சில கருவிகள் மட்டும் ஓரளவு உருப்படியாக இருக்கின்றன. தீயணைப்பு துறையிடம் ஏணிகள் மட்டும், அதுவும், எல்.ஐ.சி. போன்ற கட்டடங்களில் தீவிபத்து என்றால் எட்டாது. தீயணைப்பு வீரர்களிடம் கருணை இருக்கிறது, அபாயத்தில் சிக்கியவர்களை மீட்கும் அர்ப்பணிப்பு இருக்கிறது. அதுமட்டும் போதுமா?
இதுவரை இல்லாத வகையில் 3 அமைச்சர்கள் இரவு முழுவதும் முகாமிட்டது பாராட்டுதலுக்குரியது. ஆனால், இதுவரை ஆழ்துளை கிணறுகளை மூட அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இத்தகைய பேரிடர்களிலிருந்து மீட்க எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? என்னென்னெ கருவிகள் வாங்கி வைத்திருக்கிறது? பேரிடர் மீட்பு ஒத்திகை, விழிப்புணர்வென்று பம்மாத்து காட்ட மட்டும் ஆண்டுக்கு சில கோடிகளை செலவழிக்கின்றனரே?
உடனிருந்த அதிகாரிகள், நிபுணர்கள் என்னதான் செய்தார்கள்? இடம், சூழல் பார்த்து இந்த முறைதான் ஏற்றது என்று முடிவுசெய்து அதற்கான முறையில் தேசிய பேரிடர் மீட்பு படை போன்றதை முன்னதாக அழைத்திருக்கலாமே? அதுமட்டுமல்ல, முன்யோசனையின்றி பக்கவாட்டு குழி தோண்டும் வேலையை கிடப்பில் போடிருக்க வேண்டாமே? இப்போது 24 மணி நேரத்துக்கு பிறகு முதலில் இருந்தென்றால், மூளை இருந்தென்ன லாபம்?
இன்று வரிசை கட்டும் வருவாய் துறையினர், 2010 மத்திய அரசின் சட்ட வெளிச்சத்தில் தலையாரி, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், 5 வகை தாசில்தார்கள் மூலம் ஆழ்குழாய் கிணறு மூடாத அத்துமீறல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே? இதிலே பேரிடர் மேலாண்மைக்கென்று ஒரு உருப்படாத பிரிவு வேறு!
சுஜித் மீட்பை அழுகையால் நிறைவேற்றமுடியாது. எனவே, கண்ணீரை துடைத்து கருத்துடன் பேசுவோம். ஆழ்துளை கிணறு மரணங்கள் பலவற்றுக்கிடையே அக்கறையுடன் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் 2010 சட்டம், அதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் ஐந்துக்கும் மேற்பட்ட ஆணைகள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றை நிறைவேற்றாததால்தான் இன்று சுஜித் குழிக்குள் சிக்கிக்கிடக்கிறான். அவனை மீட்கும் பணிக்காக சுமார் ஒரு கோடியாவது செலவு வரும். அரசின் கடமை எனினும், இந்த செலவுத்தொகை கிடைத்தால் மற்றொரு விபத்து நடக்காமல் தடுக்கவோ, நடந்தால் காப்பாற்றவோ பயன்படுத்தலாம்.
எனவே, சட்டத்தை, அரசாணையை சட்டை செய்யாத மாவட்ட ஆட்சியர், தாசில்தார், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் மீது வழக்கு தொடருங்கள். அவர்களிடமிருந்து மீட்பு நடவடிக்கைக்கான செலவை வசூலியுங்கள்.
இதே பாணியில் மணல் கடத்தலை கண்டுகொள்ளாத, போலி பட்டா, ஆக்கிரமிப்பை பற்றி கவலைப்படாத, சட்டத்தின் ஆட்சியில் சட்டங்களை சட்டை செய்யாத அனைத்து துறை அதிகாரிகளையும் நீதியின் வளையத்துக்குள் நிறுத்துங்கள். சட்டத்தை இருட்டறைக்குள் வைத்திருக்காதீர்கள்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு:
ஆழ்துளை கிணறு தோண்டும் நிறுவனத்தினர் அரசிடம் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். கிணறு தோண்டுபவர் 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் அல்லது அவர் வசிக்கும் உள்ளாட்சி அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும்.
ஆழ்துளை கிணறு தோண்டும்போது அருகில் கிணறு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதில் கிணறு தோண்டுபவரின் முகவரி, கிணறு தோண்டும் இயந்திர நிறுவனத்தின் முகவரியை குறிப்பிட வேண்டும்.
கிணறு தோண்டியதும் அதைச் சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும். கிணற்றைச்சுற்றி கான்கிரீட் மேடை அமைக்க வேண்டும். கிணற்றின் வாய்ப்பகுதியை இரும்பு பிளேட்டால் மூடவேண்டும். கிணறு தோண்டி முடித்ததும் அந்த பகுதியை சுற்றி ஏற்படும் குழியை முற்றிலும் மூடவேண்டும். பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றை அடிப்பாகம் வரை மண்ணிட்டு மூட வேண்டும்.
இந்த வழிகாட்டி நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும்.