16 மணிநேரம் தீவிரமாக முயன்றும் சுஜித்தை மீட்பதில் பின்னடைவு

0
1253

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்த கூலித்தொழிலாளியின் இரு வயது குழந்தை சுஜித்தை மீட்க கலெக்டர், எஸ்பி, சுகாதார அதிகாரிகளுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் நிகழ்விடத்தில் முகாமிட்டனர். தீயணைப்பு துறையினர் உட்பட அனைத்து துறையினரும் தீவிரமாக செயல்பட்டனர்.
முதலில் 2 சிலிண்டர்கள் மூலம் குழந்தை சுவாசிக்க போதிய ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. விளக்கு வெளிச்சம் பாய்ச்சி குழந்தையின் அச்சம் போக்கப்பட்டது. தாய் பேசிய ஆறுதல் ஆடியோ குழந்தைக்கு கேட்கச்செய்யப்பட்டது. அதற்கு குழந்தையும் பதில் குரல் கொடுத்தது.
பின்னரும் தொடர்ந்து குழந்தை அழுகுரல் மற்றும் சுவாச ஒலி கேட்டதால் மருத்துவர்கள் நிம்மதி அடைந்தனர். குழாயில் காமிரா பொருத்தி குழந்தையின் நிலையை அவ்வப்போது அறிந்துகொண்டனர்.
ஆழ்துளைக்கிணற்றுக்கு பக்கவாட்டில் ஜேசிபியால் தோண்டப்பட்டாலும், ஆழ்துளைக்கிணற்று வழியாகவே குழந்தையை மீட்கும் வகையில் மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த போர்வெல் ரோபாவை செலுத்த முடிவு செய்யப்பட்டது. தகவலறிந்து மணிகண்டன் விரைந்த அதே நேரத்துக்குள் மதுரை தீயணைப்பு நிலையத்தாரும் வந்து சேர்ந்தனர். மதுரையிலிருந்து சம்பவ இடத்துக்கு ஒரு மணி நேரத்துக்குள் அவர்கள் வந்துள்ளனர். பின்னர் கயிறு மூலம் அக்கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது.


கருவியுடன் செலுத்தப்பட்ட கயிறு குழந்தையின் ஒரு கையில் சரியாக பொருந்தியது. என்றாலும், மறுகையில் மாட்ட சற்று தாமதமானது. தாய் மூலம் கையை அசைக்குமாறு சொல்லப்பட்டது. ஆனாலும், வாகாக கை மாட்டவில்லை. இந்நிலையில் மணிகண்டன் குழு, மதுரை தீயணைப்பு குழுவை தொடர்ந்து கோவையிலிருந்தும் ஒரு மீட்புக்குழு வந்தது.மூன்று குழுக்களின் முயற்சியும் பல மணி நேரம் தொடர்ந்தது. அதன்பிறகும் மீட்பு முயற்சி சிரமமானதால் ஐஐடி தொழில்நுட்பக் குழுவும் வந்தது. நாமக்கல்லை சேர்ந்த வெங்கடேஷ் குழு கொண்டுவந்த நவீன கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது.15 கிலோ எடை கொண்ட அந்தக் கருவி மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்கவும், மைக் மூலம் பேசவும் முடிந்தது.

இறுதியில் ஒருவழியாக கயிற்றை மாட்டி இழுக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக பிடிப்பு தளர்ந்து குழந்தை 60 அடிக்கு கீழே போய்விட்டது. மேலும் முயன்ற நிலையில் குழந்தை மீது மண் விழுந்துவிட்டது. என்றாலும் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது.
கீழே செல்லச்செல்ல விட்டம் குறுகலாக இருப்பதால் 50 அடிக்குமேல் கருவியை செலுத்த சிரமமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இவ்வாறு பின்னடைவு ஏற்பட்டாலும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உதவியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் மீட்பு பணியை தொய்வின்றி தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here