பரிசு இருந்தாத்தான் பண்டிகை?

0
1438

மனிதர்களுக்கு கொண்டாட்டம் தேவை. கொண்டாட்டத்திற்கு பணம் தேவை. அந்தப் பணம் அவர்கள் சம்பாதித்ததாக இருக்க வேண்டும் என்பது தமிழ் பண்பாடு.ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் ஜனநாயக களியாட்டமாகிய தேர்தலில் கருப்பு பணம் ஆறாக ஓடுகிறது. ‘ஆற்றில் தண்ணீர் நீ குடி நான் குடி என்று ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு பணம் பறித்து விளையாடுகிறார்கள். ‘அவர்கள் பணத்தையா கொடுக்கிறார்கள், நம்மிடமிருந்து எடுத்தது தானே?’ என்று பொறுக்கித்தனமாக கேட்வும் தயங்குவதில்லை. அடுத்து நமது பாக்கெட்டிலிருந்து தானே அடிப்பார்கள் இந்த அரசியல் ஜேப்படி காரர்கள்? என்று சிந்திப்பதும் இல்லை.

மன்னராட்சி மறைவுக்குப்பின் மக்களாட்சியின் முதல் கட்டம் முதலாளிகளின் கொண்டாட்டமாக இருந்தது. ஜனநாயகம் அரங்கேறிய நாடுகளில் பிரபுக்கள் சபை என்று தனியாக இருந்தது,அதுவே அரசியலமைப்பை கட்டுப்படுத்தியது. சில நாடுகளில் பட்டம் படித்தவர்கள் அந்த வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள்.

இந்நிலையில்தான் பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கும் பிரபுத்துவ முறையை மாற்றி எல்லாருக்குமான மக்களாட்சி அமையவேண்டும். அதற்காக எல்லாரும் வாக்களிக்க வேண்டுமென்ற நன்முயற்சியால் இன்றைய ஜனநாயக முறை வடிவமைக்கப்பட்டது.

ஆனால், அதுவும் , அடியாட்களை கொண்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து,ஏதாவது ஒரு அரசியல் கட்சியை பிடித்து,  காசுகட்டி சீட்டு வாங்கி, அதே ஆசை காட்டி ஓட்டுவாங்க முடியுமென்ற இன்றைய நிலை மீண்டும் முழுமையான முதலாளித்துவ ஆட்சி அமைப்பையே ஏற்படுத்தும், பொதுமக்கள் அதே அடிமை நிலையில் தொடர்வார்கள் என்ற அடிப்படை சிந்தனையை அடித்தள மக்களுக்கு உணர்த்துவதற்கு யாரும் தயாராக இல்லை.

தேர்தல் என்ற சனநாயக வாசலை தட்ட பணம்தான் கருவி என்றால் சனநாயகம் பணநாயகம் ஆவதும், அரசாட்சி என்பது அராஜகம் நிச்சயம் நிகழும். ஏற்கனவே திருமங்கலம் ஆர் கே நகரில் கடைபிடித்த மோசமான வாக்கு வாங்கும் முறையையே தமிழகம், புதுவையில் நடந்த மூன்று சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் முன்னணி அரசியல் கட்சியினர் கடைப்பிடித்தனர்.

பணம் கொடுப்பதற்கு அவர்களும், பணம் பெறுவதற்கு மக்களும் வெட்கப்படவில்லை. இந்த வெட்கம் அற்ற நிலை துக்கம் உற்ற நிலையை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.ஒருவித நம்பிக்கையுடன் திரட்டப்பட்ட மகளிர் குழுக்கள், இளைஞர் அமைப்புகள்,விவசாயிகள் சங்கங்கள், தொழிலாளர் இயக்கங்கள் யாவுமே இந்த சனநாயக சாக்கடைக்குள் முங்கு நீச்சல் அடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் அறநெறியை மூச்சுத் திணற வைக்கும் அவலம் அகல இப்போதைக்கு உடனடியாகத் தேவை தேர்தலில் மோதும் கட்சிகள் அல்ல, மக்களை ஜனநாயகப்படுத்தவும் ஆட்சியாளர்களை தட்டிக் கேட்கவும் துணிச்சல் மிகுந்த எழுச்சி இயக்கங்களே. பரிசு இருந்தாத்தான் பண்டிகை என்னும் சூப்பர் சரவணா ஸ்டோர் தாரக மந்திரம் வணிகத்துக்கு சரிப்படும், ஜனநாயகத்துக்கு சரிப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here