ரூபி மனோகரனுக்கு சீட் கிடைத்தது எப்படி?  

0
744

நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி ஆர். மனோகரன் (60) போட்டியிடுகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே குன்னத்தூரை சேர்ந்தவர் மனோகரன். தற்போது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இதற்குமுன் கட்சியில் தாம்பரம் நகர தலைவர், காஞ்சிபுரம் மாவட்ட வர்த்தக அணித் தலைவர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். எம்பிஏ படித்துள்ள இவர் சென்னையில் ரூபி பில்டர்ஸ் என்னும் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

15 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணிபுரிந்துள்ளார். அகில உலக காந்திய சிந்தனை அமைப்பின் தமிழக தலைவராகவும் செயல்படுகிறார். இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு அசோக் என்ற மகனும், சிந்தியா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த மக்களவை தேர்தலுக்குமுன் சக்தி திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை ராகுல்காந்தி அறிவித்தபோது தமிழகத்திலேயே அதிகமான உறுப்பினர்களை சேர்த்து 2 லட்சம் புள்ளிகளை ரூபி மனோகரன் பெற்றார்.  இதனால் தலைமையில் இவருக்கு நற்பெயர் இருக்கிறது.

மக்களவைத் தேர்தலின்போது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட இவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசிநேரத்தில் கட்சி தலைமை எச். வசந்தகுமாரை வேட்பாளராக களமிறக்கியது.

ரூபி மனோகரன் நட்புரீதியில் கட்சி தலைவருக்கும் வசந்தகுமாருக்கும் நெருக்கமானவர். அதுமட்டுமின்றி, இவருக்கு போட்டியாக விளங்கிய குமரி அனந்தனுக்கு வயது முதிர்வு நெருடலாக அமைந்துவிட்டது. ஊர்வசி அமிர்தராஜ் டச் விட்டுவிடக்கூடாது என்று பெயருக்கு சீட் கேட்டாரேயொழிய, அவரது மனம் சொந்த தொகுதியான ஸ்ரீவைகுண்டத்திலேயே அடித்துக்கொண்டிருந்தது.
பிற ஓரிருவர் இடைத்தேர்தல் செலவைத்தாங்கும் தகுதியற்றவர்களாக இருந்தனர். ஆக, இறுதியாக ரூபி மனோகரன் மிஞ்சினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here