இந்திய பார் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அப்போது நாட்டில் தற்போது 1,500 சட்டக்கல்லூரிகள் உள்ளன. வக்கீல்களுக்கு பற்றாக்குறையும் இல்லை. இப்போதுள்ள கல்லூரிகளில் இருந்து ஆண்டு தோறும் வெளிவரும் வக்கீல்களே போதுமான அளவில் உள்ளனர். சட்டக்கல்லூரிகள் தொடங்க மாநில அரசுகள் தடையில்லா சான்றுகள் கொடுக் கின்றன.
பல்கலைக்கழகங்களும் பொறுப்பற்ற முறையில் அதற்கு அனுமதி கொடுக்கின்றன. எல்.எல்.எம். அல்லது பிஎச்.டி. பட்டம் பெறுவது மிக சுலபமாகிவிடுகிறது. இந்த காரணத்தால் நாட்டில் நல்ல சட்ட ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை உள்ளது. எல்.எல்.எம்., பிஎச்.டி. பட்டங்கள் இந்திய பார் கவுன்சில் கட்டுப்பாட்டில் இல்லை.
2016-ல் 2 வருடங்களுக்கு புதிய சட்ட கல்லூரிகள் தொடங்க மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அதன் பின்னரும் 300 தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய பார் கவுன்சில் அனுமதி மறுத்ததும் சிலர் கோர்ட்டுகளுக்கு சென்றனர்.
தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் தவிர 3 வருடங்களுக்கு புதிய சட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்குவது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த 3 வருடங்களில் உரிய உள்கட்டமைப்பு அல்லது ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கி வரும் சட்ட கல்லூரிகள் மூடப்படும் என இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.













