உயிருக்கு வேட்டு வைக்கும் குவாரி _ உதாசீனப்படுத்தும் அதிகாரி

0
1389

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் _ கலுங்குவிளை சாலையில், துவர்க்குளம் விலக்கருகே கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் நெடுஞ்சாலையை ஒட்டி குவாரி அமைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், நோயாளிகள் உயிர் பயத்துடனேயே சுமார் 1 கி.மீ. தூரத்தை கடக்கின்றனர்.
ஏற்கனவே துவர்க்குளம் விலக்கு பேருந்து நிறுத்தம் குவாரி கற்களால் இடிந்து விழுந்ததோடு, அவ்வூரை சேர்ந்த தயனேஸ் என்பவர் குவாரி லாரி மோதி இறந்தார். விதிமுறை மீறி அதிக ஆழமாக தோண்டப்பட்ட குவாரியில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகள் வைப்பதால் பெருங்கற்கள் சிதறி அருகில் உள்ள வயல்களில் விழுந்து விளைபயிர் நாசமாகிறது. இதனால் தொடர்ந்து குளம் பெருகிய நிலையிலும் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
40 டன்களுக்கு மேல் எடையுள்ள இராட்சத கற்களை ஏற்றிச்செல்லும் டாரஸ் லாரிகளால் சாத்தான்குளம் –  கலுங்குவிளை, சாத்தான்குளம் _ கொம்பன்குளம் 10 கி.மீ.சாலைகளில் 8.5 கி.மீ. சாலை மிகவும் சேதமடைந்து விட்டது.
கிலோக்கணக்கில் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை செலுத்தி கற்களை உடைப்பதால் சுற்றியுள்ள ஊர்களில் 100க்கு மேற்பட்ட வீடுகளில் கீறல், வெடிப்பு விழுந்து, அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது. வெடி வைக்கும்போது எழும் புகை அப்படியே மேகப்படலமாக நிலைத்து சுவாசக் கோளாறுக்கு வழிவகுக்கிறது.
ஏற்கனவே விதிமுறை மீறியதால் அப்போதைய கோட்டாட்சியர் குவாரியை தடை செய்தார். ஆனாலும், ஊழல் அதிகாரிகள் மீண்டும் இயங்க அனுமதித்ததால் 20 ஊர் மக்களும் மிகுந்த பாதிப்பில் உள்ளனர்.
இதனால் குவாரியை தடை செய்யக்கோரி 20 ஊர் பொதுமக்களின் பிரதிநிதிகளும் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கோட்டாட்சியர் தனப்ரியா மாலையில் குவாரியை பார்வையிட்டார். அவரிடம் வீடு சேதமடைந்த ஜார்ஜ், பார்த்தசாரதி, விளைநிலத்தில் பயிரிட முடியாமல் தவிக்கும் செல்லத்துரை ஆசிரியர், பம்ப்செட் சேதமடைந்த டேவிட், பறந்துவந்த கற்களிலிருந்து உயிர் தப்பிய நிலையில் குவாரிக்காரர்களால் மிரட்டலுக்கு ஆளான வேல் கோனார்  மற்றும் 5 ஊர்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவிகள், விவசாயத்தை கைவிட்டவர்கள் சாட்சியமளித்தனர்.


ஆனாலும், வெடிச்சத்தத்துக்கு விஞ்ஞான விளக்கம் அளித்துவிட்டு, ‘ஜியாலஜிஸ்ட்’ மூலம் ஆய்வு செய்வதாக பதில் அளித்துவிட்டு ஆர்டிஓ சென்றுவிட்டார். சேதமடைந்த பிற வீடுகள், விளை நிலத்தை, குவாரி லாரி மோதி கால் உடைந்தவரை பார்க்க வேண்டுகோள் விடுத்தும் நேரமாகிவிட்டதாக கூறி ஆர்டிஓ புறப்பட்டு சென்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூண்டில் வளைவு, குலசை துறைமுகம், அனல் மின் நிலையம் போன்ற அரசு திட்ட வேலைகளுக்கு பெருமளவு தேவைப்படுவதால் ‘எவன் செத்தாலும் பரவாயில்லை’ என்று கற்களை பெயர்த்தெடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் அனுமதிப்பதாகவும், இலஞ்சம் காரணமாகவே 20 ஊர் மக்களின் உயிர், உடைமைக்கு அச்சுறுத்தலான தடைசெய்யப்பட்ட குவாரியை மீண்டும் இயங்க செய்ததாகவும் போனிபாஸ், இசக்கிமுத்து, பார்த்தசாரதி. அன்றோ, அந்திரேயா, அந்தோணி சவரிமுத்து, ரஞ்சன், போஸ் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகள் கூறினர்.
குவாரியை உடனடியாக தடைசெய்யாவிட்டால் வீடு சேதமடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஏதாவது அரசு அலுவலகங்களில் தஞ்சம் புகுந்து குடியேறவேண்டிய நிலை ஏற்படும் என மகளிர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். குவாரியில் போய் குடியேறவும் தயாராக இருப்பதாக இளைஞர்கள் பொறுமினர்.
பொதுமக்களின் வேதனை பொறுமலாக வெடிப்பதுபோல், அதிகாரி வந்துசென்ற மறுநாளே பலத்த சத்தத்துடன், புகை மண்டலம் கிளப்பியவாறு குவாரி வேட்டு சத்தம் 20 கிராம மக்களின் காதுகளையும் துளைத்தது. விவசாயத்தையும் வீட்டையும் இழந்து பயத்துடன் ரோட்டை கடக்கும் மக்கள் என்ன முடிவு எடுக்கப்போகின்றனரோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here