சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சானாவூரணியை சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ. இவருக்கும் கடம்பாக்குடியை சேர்ந்த வினிதா (வயது19) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது.
அதன் பிறகு கணவன்- மனைவி காளையார் கோவிலில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். திருமணமான 45 நாளில் வேலைக்காக ஆரோக்கிய லியோ மனைவியை தனியாக விட்டுவிட்டு சிங்கப்பூர் சென்று விட்டார்.
தனிமையில் இருந்த வினிதா இணையத்தில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். டிக்-டாக் செயலியில் வீடியோ எடுத்து பதிவிடும் பழக்கம் அவருக்கு இருந்தது.
டிக்-டாக் செயலி மூலம் திருவாதவூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் டிக்-டாக் செயலியில் இணைந்து வீடியோ வெளியிட்டு வந்தனர்.
இதன் உச்சக்கட்டமாக வினிதா தனது தோள்பட்டையில் அபியின் படத்தை ‘டாட்டூ‘ செய்து பெயரையும் பச்சை குத்தி இருந்தார். இதையறிந்த சிங்கப்பூரில் இருக்கும் வினிதாவின் கணவர் ஆரோக்கிய லியோ மனைவியை செல்போனில் கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லியோ சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
வீட்டில் இந்த பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த 20 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதற்கு வினிதா உரிய பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து ஆரோக்கிய லியோ மனைவி வினிதாவை கடம்பாக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார்.
இதனிடையே வீட்டில் இருந்த வினிதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது. எனவே நகைகளை எடுத்துக் கொண்டு வினிதா சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நகைகளுடன் மாயமான வினிதா தோழி அபியுடன் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.