கூடங்குளம் அருகே விபத்தில் 2 பேர் பலி

0
1293

நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே உள்ள ஒரு கல்குவாரியில் இருந்து எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி குமரி மாவட்டம் மார்த்தாண்டத்துக்கு சென்றது. அந்த லாரியை கன்னியாகுமரி மாவட்டம் பாக்கொட்டைவிளையை சேர்ந்த சுபின்ராஜ் (வயது 26), என்பவர் ஓட்டிச்சென்றார். கிளீனராக மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சஜின் (32) என்பவர் இருந்தார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் கூடங்குளம் அருகே உள்ள பொன்னார் குளம் விளக்கு பகுதிக்கு வந்த போது லாரியை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு இருவரும் அங்கிருந்த கடையில் டீக்குடிக்க சென்றனர். டீக்குடித்து விட்டு அங்கிருந்து புறப்பட தயாராகினர். டிரைவர் சுபின்ராஜ் லாரியில் ஏறி அமர்ந்தார்.

கிளீனர் சஜின் லாரிக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு டெம்போ வேன் சென்றது. அந்த வேன் ரோட்டோரம் நின்றுகொண்டிருந்த டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் லாரியும் பின்னால் நின்றுகொண்டிருந்த கிளீனர் சஜின், டெம்போ வேன் டிரைவரான நாகர்கோவில் வழுக்கம்பாறையை சேர்ந்த முருகன் (35) ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பலியாகினர். லாரியின் உள்ளே அமர்ந்திருந்த டிரைவர் சுபின்ராஜூம் காயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வேகமாக வந்து மோதியதால் லாரியின் பின்பக்கத்தில் டெம்போ வேன் சிக்கிகொண்டது. இதனால் வேன் வெகுசிரமத்திற்கு பின் எடுக்கப்பட்டது.

பின்பு வேன் டிரைவர் மற்றும் லாரி கிளீனரின் உடல் மீட்கப்பட்டது. இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த டிப்பர் லாரியின் டிரைவர் சுபின்ராஜ் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here