கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.
இதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தான் காரணம் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா குற்றச்சாட்டு கூறினார். ஆனால் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசாமல் குமாரசாமி தன்னிச்சையாக முடிவு எடுத்ததே கூட்டணி அரசு கவிழ்வதற்கு முக்கிய காரணம் என்று சித்தராமையா கூறினார்.
சித்தராமையா மீது தேவேகவுடா குற்றச்சாட்டு கூறுவதற்கு கூட்டணி அரசில் நடந்ததாக கூறப்படும் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் காரணம் என்று கூறப்படுகிறது. தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். இதையடுத்து, தொலைபேசி ஒட்டு கேட்பு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கட்சியை வளர்ப்பதற்காக, இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் ஜனதாதளம்(எஸ்) கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. காங்கிரசும் இதேபோன்று ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் போட்டியிட விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் பல்வேறு தொலைபேசி உரையாடல்கள் சட்டவிரோத முறையில் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவு மற்றும் கர்நாடக அரசின் வேண்டுகோளுக்கேற்ப, சி.பி.ஐ. வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.












