
முரசொலி மாறன் என்றதும் எல்லாருக்கும் நினைவு வருவது திமுகவின் டெல்லி முகமாக இருந்தார் என்பதும் கருணாநிதி அவரை தனது மனசாட்சி என்று கூறியதும் தான் நினைவுக்கு வரும் தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி முரசொலி மாறன் ஆவார்.
முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.
இவர்1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ம்தேதி சண்முகசுந்தரம் மற்றும் சண்முக சுந்தரி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இதில் முரசொலி மாறன் தாயாரான சண்முக சுந்தரி திமுக தலைவரான கருணாநிதியின் இரண்டாவது அக்கா .முரசொலி மாறன் திருவாரூர் (தற்போது நாகப்பட்டினம்) மாவட்டம், திருக்குவளையில் பிறந்தார். இவரின் இரண்டு மகன்களில் ஒருவர், தயாநிதி எம்பியாக உள்ளார் மற்றவர் கலாநிதி சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
முரசொலி மாறன் அரசியல், இலக்கியம் தொடர்பான நூல்களுடன் சில தமிழ் திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதுபவராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் குலதெய்வம் (1956 ) அன்னையின் ஆணை (1958) அன்பு எங்கே (1958) தலை கொடுத்தான் தம்பி (1959)
சகோதரி (1959) நல்ல தீர்ப்பு (1959) போன்ற படங்களுக்கு கதை, உரையாடல் எழுதியவர் பிள்ளையோ பிள்ளை (1972) மறக்க முடியுமா (1966) போன்ற படங்களை தயாரித்ததுடன் மறக்க முடியுமா (1966) வாலிப விருந்து (1967) என்ற படங்களை இயக்கியவர்
அறிஞர் அண்ணா இருந்த போதே அரசியலுக்கு வந்தவர் முரசொலி மாறன். 1967ல் தென் சென்னை தொகுதியில் வென்றிருந்த அண்ணா, தமிழக முதல்வராக பொறுப்பேற்றதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட முரசொலி மாறன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
இதனையெல்லாம் தாண்டி இந்தியாவின் நவீன பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்த சிற்பிகளில் முரசொலி மாறனும் ஒருவர். வாஜ்பாய் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக முரசொலி மாறன் இருந்த காலகட்டங்களில் உலகமயமாக்கலின் காரணமாக மிகக் கடினமான சூழல்களை இந்தியா சந்தித்துக் கொண்டிருந்தது. கத்தாரின் தோஹாவில் நடந்த உலக வர்த்தக கூட்டமைப்பின் மாநாட்டில் முரசொலி மாறனின் உரை மிகவும் முக்கியமானது.
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நவம்பர் 23, 2003 ஆம் ஆண்டு தன்னுடைய 69வது வயதில் இறந்தார். இவர் இறப்பதற்கு முன் பல வாரங்களாக கோமாவில் இருந்தார். பிரதம மந்திரி வாஜ்பாய் மற்றும் பல அரசியல் தலைவர்கள் சென்னையில் நடந்த இவரது இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர்.
அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த திராவிட இயக்க ஆய்வாளராகவும் அறியப்பட்டவர் முரசொலி மாறன். இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக முரசொலி மாறன் இருப்பார் என்றால் அது மிகையல்ல.














