கிருபானந்த வாரியார் பிறந்த நாள் இன்று…
வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் மல்லையதாசர் – கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார்.
இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ் பாடி வந்த மல்லைய தாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான “கிருபானந்த வாரி” எனும் பெயரைச் சூட்டினார்.
தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார்.
இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு.
சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை.
ஒரு முறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து “சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?” என்று கேட்டார்.
அதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே.” என்று கூற
“அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?” என்று கேட்டனர்.
இதனைக் கேட்ட வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத் தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர்.
யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது.
இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.













