சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அண்ணா பல்கலை துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வேல்ராஜிடம் பல்கலையை உலக தரத்திற்கு உயர்த்த முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
வேலை வாய்ப்பிற்காக தயாராகும் வகையில் மாணவர்களுக்காக வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
மேலும், சமூகம், தொழிற்சாலைகளில் பயிற்சிக்கு என்று தனியாக பாடத்திட்டம் அமைக்கவும் வலியுறுத்தியுள்ளோம்.
ஆராய்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அண்ணா பல்கலையை பன்னாட்டு தரத்திற்கு உருவாக்க துணை வேந்தர் திட்டங்களை செயல்படுத்துவார். அதற்கு உயர்கல்வித்துறையும் துணை நிற்கும்’ என்றார்.
இதைத்தான் கடந்த ஆட்சியிலும் மைய அரசின் கீழ் கொண்டு வரும் முயற்சியின்போது அதிமுக ஆட்சியாளர்கள் சொன்னார்கள். ’கடந்த ஆட்சியில் இருந்தது போல இல்லாமல், துணை வேந்தர் அரசோடும், துறை செயலரோடும் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்’ என்று வேறு பொன்முடி கூறியிருப்பதால், அண்ணா பல்கலை நிர்வாக அதிகாரம் மாநில அரசின் மையில் இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பின் போது உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன், அண்ணா பல்கலை துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.