முந்திரி லாரியை கடத்திய முன்னாள் மந்திரி செல்லப்பாண்டியன் மகன் கைது

0
521

கன்னியாகுமரியில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட 12 டன் முந்திரியை, லாரியுடன் கடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தக்கலையில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் இருந்து வந்த லாரியை தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி லாரியை கடத்தினர். இது தொடர்பாக லாரி ஓட்டுநர் ஹரி முந்திரி ஆலை மேலாளர் ஹரிகரன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.


இதன் அடிப்படையில் தூத்துக்குடி டிஎஸ்பி சந்தீஸ்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் கடத்தப்பட்ட லாரியை தீவிரமாக தேடினர். சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை வைத்து லாரியை போலீசார் தேடியபோது லாரிக்கு பின்னால் கார் ஒன்று தொடர்ந்து செல்வதை கண்டுபிடித்த போலீசார், லாரி, நாமக்கல் நோக்கி செல்வதை அறிந்து விரட்டி சென்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் நின்ற காரில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அதில் இருந்தவர்கள் அதிமுக முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங்,விஷ்ணுகுமார், மனோகரன்,மாரிமுத்து ராஜ்குமார், செந்தில்குமார் மற்றும் பாண்டி என்பதும், அவர்கள் தான் லாரியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்ததுடன், லாரியை புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர்.

ஜெபசிங் உட்பட கைதான 7 பேரையும் தூத்துக்குடி ஜே எம் 4 ல் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். புகார் அளித்து 12மணி நேரத்தில் லாரியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here