ஆற்றங்கரை, கடற்கரைகளில் அபாயகரமான தொழிற்சாலை நடத்தும் கார்ப்பரேட்டுகள், அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் இரவில் கழிவு நீரை ஆற்றிலும் கடலிலும் கலந்து விடுவது வழக்கம். கொள்ளை லாபத்திற்காக தனியார் நிறுவனம் செய்வதை நெல்லை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொள்ளை நோய்க்கு வழி வகுக்கிறது என்றால் நம்புவீர்களா?
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் பெருகும் சாக்கடையை அவ்வப்போது பொதுப்பணித்துறையினர் கள்ளத்தனமாக பாளையங்கால்வாயிலும் தாமிரபரணி ஆற்றிலும் திறந்து விடுவதுண்டு.
அதேபோல், நெல்லை மாநகராட்சி, தெற்கு பைபாஸ் சாலையை ஒட்டி வரும் ராட்சத கழிவு நீர்க் குழாயில் சாக்கடை பெருகினால், குழாயை உடைத்து நெடுஞ்சாலை ஓரமாக பின்னால் உள்ள நன்செய் நிலத்துக்குள் வருடந்தோறும் திறந்து விடுகிறது. அப்படித்தான் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு முன்பு பல லட்சம் லிட்டர் சாக்கடை கழிவுநீரை திறந்து விட்டது. இப்போது மீண்டும் அந்த மோசமான செயலை தொடர்ந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள சில வணிக நிறுவனங்களில் இருந்தவர்களும் மூன்று பெரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகளும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகிறார்கள். இரு வாரங்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட போது சாக்கடை நெடி தாளாமல் தலைவலி ஏற்பட்டு இரு நோயாளிகள் மயங்கி விழுந்தனர்.
சாக்கடை நீர் ஆறு போல பெருகி ஓடியதால், அதைக் கடந்து மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் ஏராளமான நோயாளிகள் தவித்தனர்.இரண்டு நாட்கள் பைபாஸ் மேம்பாலத்துக்கு மேல் வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் அலட்சியப்படுத்தி ஓரிரு நாட்களுக்குப் பின்பே அடைத்தனர்.
மாநகராட்சியினர் கள்ளத்தனமாக திறந்து விடும் இந்த சாக்கடை நீர், மருத்துவமனைகளுக்கு பின்னால் உள்ள வயலில் பெருகுவதால் சில வருடங்களாக இப்பகுதியில் விவசாயிகள் வேளாண்மை செய்வதில்லை. வயலில் பெருகும் நீர் அப்படியே வழிந்து, பலாப்பழ ஓடை வழியாக தாமிரபரணியில் கலக்கிறது. இதனால் தாமிரபரணி தூய்மைக்காக பாடுபடும் தன்னார்வலர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
முன்பு கருப்பன்துறை அருகே நேரில் சாக்கடை கழிவை திறந்து விட்டு எதிர்ப்பை சம்பாதித்ததால், இப்போது மறைமுகமான மோசடி வேலை செய்கின்றனர். எனவே உடனடியாக சாக்கடை வெள்ளத்தை கட்டுப்படுத்துவதோடு, தொடர்ந்து குழாயை உடைத்து திறந்து விடுவதை கைவிட வேண்டும். இல்லையேல், சாக்கடை நீரால் வயல்வெளியையும் தாமிரபரணியையும் நாறடிக்கும் மாநகராட்சியை எதிர்த்து, விவசாயிகளையும் இணைத்து கடினமான போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.









