ஒரு காலத்தில் சட்டமன்ற தொகுதி தலைமையிடமாக இருந்த சாத்தான்குளம் அந்த அந்தஸ்தை இழந்ததால் பலவகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. தொகுதி அந்தஸ்து போனாலும் தாலுகா அந்தஸ்து இருக்கவே செய்கிறது. அதற்கேற்றவாறு பழமையான தாலுகா அலுவலகம், பெரிய அரசு மருத்துவமனை இருந்தும் உரிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் அங்கும் சேவை கிடைப்பது சிரமமாக உள்ளது.
குறிப்பாக, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை 27 கிராமங்களை உள்ளடக்கியது. 50 படுக்கைகள் கொண்ட இந்த அரசு மருத்துவமனைக்கு தினமும் 300 முதல் 400 வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஐந்து மருத்துவர்களும் 11 செவிலியர்களும் பணிபுரிய வேண்டிய இந்த மருத்துவமனையில் தற்போது இரு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.

இருவரும் ஆண் மருத்துவர்கள் என்பதனால் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை, மற்றும் மகப்பேறு மருத்துவம் பெறுவதில் சிக்கல் உள்ளது. மாதம் சராசரியாக 20 மகப்பேறு நிகழ்ந்த இந்த மருத்துவமனையில் தற்போது ஒரு பிரசவம் கூட நடைபெறவில்லை. வட்டார பெண்கள் பிரசவத்துக்காக தொலைதூரத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, தகுந்த பெண் மருத்துவர்களை உள்ளடக்கிய மருத்துவர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும்.
அதுமட்டுமின்றி மகப்பேறு சோதனைக்காக வருகின்ற பெண்கள் அமர்வதற்கு போதிய இடமின்றி மரத்தடியில் அமர்ந்திருக்கின்றனர் பிண பரிசோதனை அறையுடன் கூடிய பிணவறை கட்டடமும் தேவையாக இருக்கிறது.
மருத்துவமனை விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு எம்எல்ஏ அமிர்தராஜ், சுகாதார துணை இயக்குநர் மதுரம் பிரைட்டன் உள்ளிட்டோர் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். ஆனாலும் மருத்துவமனை விரிவாக்கப் பணி நடைபெறவில்லை.

எனவே, அதிக நோயாளிகள் வந்துசெல்வதோடு தங்கியும் சிகிச்சை பெறும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவரோடு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கவும், மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாத்தான்குளம் வர்த்தகர்கள் சங்க கவுரவத் தலைவர் இல.ராமையா சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
புகைப்படம்: மணிகண்டன்.