சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் கல் குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அப்பகுதியில் மூன்று பெரிய கல்குவாரிகள் மற்றும் கிரஷர் உள்ளன. அவற்றுள் ஒன்றை மக்கள் போராட்டம் காரணமாக மூடிவிட்டனர். மற்ற குவாரி மற்றும் கிரஷரில் இருந்து வரும் ஆறு சக்கர எட்டு சக்கர கனரக லாரிகள் நெடுங்குளம் வழியாக சென்றபோது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அருகில் உள்ள ஓடைகரை வழியாக லாரிகள் சென்றன. அப்பகுதியில் குவாரியினரே நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்து விட்டனர். இதனால் மழைக்காலத்தில் வெள்ளம் வந்த போது வடிய வழியின்றி, ஊருக்குள் புகுந்து பெருத்த சேதத்தை விளைவித்தது.
இதனால், ஓடை கரையில் குவாரியினரால் போடப்பட்ட ஆக்கிரமிப்பு சாலையில் லாரிகள் செல்ல முடியாதவாறு பொதுமக்கள் பள்ளம் தோண்டினர். குவாரியினருக்கு ஆதரவாக வருவாய்த் துறையினர் களம் புகுந்து அந்த சாலையை சமப்படுத்தினர்.
இதனால் பெண்களே முயன்று, கற்கள் மூலம் ஆக்கிரமிப்பு சாலையில் தடையை ஏற்படுத்தினர். அதையும் வருவாய்த்துறையினர் அகற்றியதோடு காவல்துறையினருடன் சென்று பொதுமக்களை எச்சரித்து மிரட்டியதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், ஊரில் குவாரி போராட்டத்திற்கு முன் நின்ற சிலரை இணைத்து வழக்கு ஒன்றை போலீசார் புனைந்துள்ளனர் என்றும், இது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க மறுத்ததால், தாங்கள் சேர்த்தவர்களை உடனடியாக கைது செய்ய முயற்சிப்பதாகவும் கூறி சிறிது நேரத்திற்கு முன்பு நெடுங்குளம் கிராம பெண்கள் அங்குள்ள சமூக நலக்கூடத்திற்கு முன்பு கூட தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, குவாரி லாரியை சிலர் வழிமறித்து, லாரி கண்ணாடியை சேதப்படுத்தியதோடு, டிரைவரை தாக்க முயன்றுள்ளனர். டிரைவர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளோம். முறைப்படி விசாரணை நடத்துவோம் என்றனர்.









