குமரி மாவட்டம் சிதறாலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாந்தகுமார் என்ற ஏசுதாஸ் மனைவிக்கு போன் செய்த ஒருவர், ‘ உன் கணவரை கடத்தி வைத்துள்ளோம். சிறையில் இருக்கும் ஒருவர் அவரை கொன்றால் 2 லட்சம் தருவதாக சொல்லியிருக்கிறார். நீ 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுகிறோம்’ என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சாந்தகுமார் மனைவி ராதா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்ய, போலிஸ்காரர் ஒருவர் ராதாவின் உறவினர் போல் பேசி பணத்தை எங்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுள்ளார்.
கடத்தல்காரர் கூறியபடி ஞாறாம்விளைக்கு ராதாவை பணத்துடன் அனுப்பி பின் தொடர்ந்த போலீசார், பணம் வாங்கவந்த இருவரை மடக்கிப்பிடித்தனர். அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் கப்பத்தான்விளை வயல்வெளியில் ரவுடி சுனிலின் வசமிருந்த சாந்தகுமாரையும் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், பாகோடு மருதன்விளையை சேர்ந்த ரவுடி சுனில்குமார் சாந்தகுமாரி நண்பர் என்பதும், சாந்தகுமாரிடம் ‘முக்கியமான விஷயம் பேச வேண்டும்’ எனக்கூறி அழைத்துச்சென்று கடத்தியதும் தெரியவந்தது.
மேலும், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சிதறால் பகுதியை சேர்ந்த பேராசிரியை சர்மின் என்பவரை ஒருதலை காதல் விவகாரத்தில் சாஜின் என்பவர் கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட சர்மின் சாந்தகுமாரின் மாமன் மகள் என்பதால் சாந்தகுமார் அக்கொலை வழக்கில் சாட்சியம் அளித்துள்ளார். இதையடுத்து இரட்டை ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் உள்ள சாஜின், வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறைக்கு வந்த சுனிலுடன் பழகி சாந்தகுமாரை தீர்த்துக்கட்டுமாறு கூறியுள்ளார்.
சுனில் கடத்தலுக்கு கேரள கூலிப்படையினரை பயன்படுத்தியுள்ளார்.









