ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகன், தனது மகள் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்வதற்காக 6 மாதங்கள் பரோல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து நிபந்தனைகளுடன் ஒரு மாதம் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 25ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தவர். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த சூழலில் மகளின் திருமண ஏற்பாடுகளை 30 நாட்களுக்குள் முடிக்க முடியவில்லை என்று கூறி, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க தமிழக அரசு, சிறைத் துறையிடம் கோரியிருந்தார்.
அவரது கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் நிறைவடையாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ஏற்கனவே பரோல் முடியும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி அரசுக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி கோரிக்கை மனு அளித்ததாகவும் ஆனால் அந்த மனுவை ஆகஸ்ட்13 ல் நிராகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க சிறை நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு, இன்று இது தெடர்பாக பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணைளை தள்ளி வைத்ததுடன் நளினிக்கு மேலும் 3 வாரம் பரோலை நீட்டித்து உத்தர விட்டனர்.