கடம்பாகுளம் மண் திருட்டு: கஷ்டப்பட்டு டிராக்டர்களை பிடித்த ‘கடமை’போலீசார் – ‘கல்லா’ கட்டியதால் களவாணிகள் மீது புகார் கொடுக்க தயங்கும் ஏரல் தாசில்தார்

0
1558

ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பாகுளத்தில் இருந்து டிராக்டர்களில் அனுமதி சீட்டு இன்றி மண் திருடி, ஆழ்வார்திருநகரி, சிவராம மங்கலம் பகுதியிலுள்ள செங்கல் சூளைகளுக்கு கொண்டு சென்ற 27 டிராக்டர்களை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையங்களில் நேற்று மதியம் ஒப்படைத்தனர்.

டிராக்டர்கள் பிடிபட்டு சுமார் 18 மணி நேரம் கடந்த பின்னரும் இதுவரை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

பொதுவாக கனிம வளத்தை கொள்ளையடித்து பிடிபடும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் வருவாய்த் துறையினரிடமே ஒப்படைக்கப்படும்.

இதன்படி, 27 டிராக்டர்கள் விதிமுறைகளை மீறி செங்கல் சூளைகளுக்கு மண் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் ஏரல் வருவாய்த் துறையினரிடம் தகவல் தெரிவித்தும் இது வரை எந்த ஆக்சனும் இல்லை, ரியாக்சனும் இல்லை.

சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடம்பா குளத்திலிருந்து மண் திருடப்பட்டு வந்த நிலையில், விதிமுறை மீறல்கள் குறித்து பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தும் வருவாய் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக இது குறித்து பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் தகவல் சொல்லும் போதெல்லாம், அப்போதுதான் கேள்விப்பட்டவர் போல், ‘ அப்படியா, எனக்கு இதுவரை தெரியாதே’ என்று ஏரல் தாசில்தார் நாடகமாடி வந்ததாக கூறுகிறார்கள்.

லாரிகளை தப்பவிட்டவர்கள்…
டிராக்டர்களை கைப்பற்றுவார்களா?

களவு, கை கலப்பு, காயம் ஆஸ்பத்திரியில் சேர்க்கை, போலீஸ் புகார், ஊடகத்தில் பரபரப்பு என்று பல சம்பவங்கள் நடந்த பின்பும், நேற்றைய நிலையில் நிருபர்கள் கேட்டதற்கும், சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக,’ அப்படியா, எனக்கு தெரியாதே’ என்று ஏரல் தாசில்தார் பழைய ‘டயலாக்’கையே அடித்து விட்டுள்ளார்

ஏதோ ஸ்ரீவைகுண்டத்தின் புதிய டிஎஸ்பி ராமகிருஷ்ணன் பதவி ஏற்ற இரு தினங்களில் உத்தரவிட்டு, தனிப்படை போலீசார் ஒரே நாளில் 27 டிராக்டர்களை பிடித்தனர்.

எனினும், சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி கடம்பா குளத்தில் இருந்து மண் திருடி செங்கல் சூளைகளுக்கு கொண்டு சென்றவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை.காரணம், இது போன்ற தில்லாலங்கடி வேலைகளுக்காகவே இதற்கு முன்பு இருந்த சொல்பேச்சு கேட்காத தாசில்தாரை வேறு இடத்திற்கு அனுப்பிவிட்டு, தற்போதையவரை மாவட்ட அரசியல் தலைவர் ஒருவர் கொண்டு வந்ததாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அவரைப் பொறுத்தவரை, ‘கல்லைத்தான் மண்ணைத்தான், அள்ளித்தான், பிற்கத்தான் கற்பித்தானா?’ என்று அவரின் தலைவர் பாணியில் கேள்வி கேட்க வேண்டிய நிலையில் உள்ளவர்.

பொதுவாக, குளங்களில் மண் அள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் பெயரில் விண்ணப்பித்தாலும் அதற்கான அனுமதி சீட்டை நீர்வளத்துறையினர் வழங்குகின்றனர். குளங்களில் மண் அள்ளும் போது நீர்வளத்துறையினர் அப்பகுதியில் இருந்து அனுமதி சீட்டு வழங்க வேண்டும்.

கண்ணெதிரே தப்ப விட்டவர்கள்

தினமும் அனுமதி சீட்டு இன்றி டிராக்டர்களில் மண் அள்ளிச் செல்ல அனுமதித்துள்ள நீர்வளத் துறையினர் மீதும் கொண்டு செல்லப்படும் மண் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க தவறிய தோட்டக்கலைத் துறையினர் மீதும், ஒட்டுமொத்த மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் கனிமவளத்துறையினர் மீதும், தொடர்ந்து பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எருமை மீது மழை பெய்த கதையாய் அவை அனைத்தையும் வழித்து, துடைத்து எறிந்து விட்டு, ‘ அப்படியா எனக்கு தெரியாதே’ என்று டிராமா போடும் ஏரல் தாசில்தார் மீதும் புதிதாக வந்துள்ள நேர்மையான மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here