போலி ஆவணம் மூலம் ரூ.1.5 கோடி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஆசிரியர்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நாடார் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியானது அரசு உதவி பெறும் பள்ளியாகும். இப்பள்ளியில் தலைமையாசிரியராக ஜான் கணேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலை ஆசிரியர்கள் என 32 பேர் பணியாற்றுகின்றனர்.
இங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் வருமான வரி கட்டுவதற்காக, பணத்தை பெற்று அதை ஸ்டேட் பாங்க்கில் செலுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. தலைமையாசிரியரின் அறிவுறுத்தலின் பேரில், இதை பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் தங்க மாரியப்பன் மூலம் நடைமுறைப் படித்து வந்துள்ளனர். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வருமான வரித் தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் வீட்டு கடன் வாங்குவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு வருமான வரித்துறை ரசீதுகளை கொடுத்தபோது, பள்ளியிலிருந்து கொடுத்த ரசீது போலியானது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, பள்ளியில் வந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்.. இதனால், மற்ற ஆசிரியர்களும் வருமான வரி செலுத்துவதற்காக கொடுத்த பணத்தை வங்கியில் சென்று சரி பார்த்துள்ளனர். அதில், அவர்களுக்கு சந்தேகம் வந்தது.
உடனடியாக, கடந்த 9ம் தேதி மாலையில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி (இடைநிலை) ஜெயபிரகாஷ் ராஜனை ஆசிரியர், ஆசிரியைகள் சந்தித்தனர். அங்கு தலைமையாசிரியர் ஜான் கணேஷ் கையெப்பமிட்டு, வருமான வரிக்கு பணம் செலுத்தியதாக ஆவணத்தை காட்டியுள்ளனர். நகலும் வழங்கி இருக்கிறார்கள். அந்த ஆவணத்தைக் கொண்டு வங்கிக்கு ஆசிரியர்கள் சென்றுள்ளனர். அங்கு அந்த ரஷீது போலியானது என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.
இதைக் கேட்டு, ஆசிரியர், ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ஆசிரியர்கள் கோவில்பட்டி மேற்கு போலீசில் தலைமையாசிரியர் ஜான் கணேஷ் மீது புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளியின் இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன் விஷம் குடித்துவிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இதனால், போலீசார் விசாரணை தாமதமாகி வருகிறது.
வருமான வரி செலுத்த கொடுத்த பணத்தை மோசடி செய்துள்ளனர், இதனால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போலியான வருமான வரித்துறை ஆவணத்தை கொடுத்துள்ளனர். இந்த தவறில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் கூட்டாக சேர்ந்து மனு அளித்தனர்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணம் ரூபாய் 1.5 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.