தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி பயிலும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே புதுமை பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்,
கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு நேரலையாக காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா கல்லூரியில் நடைபெற்றது. இளங்கலை வணிகவியல் துறை மாணவிகள் விசாலாட்சி ஹரிஹர ரூபினி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியரும் புதுமைப் பெண் திட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் தங்க கிருஷ்ணகுமாரி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் ந.விஜயகுமார் தலைமை தாங்கி வாழ்த்தி பேசினார். கல்லூரி செயலாளர் முனைவர். சே.சங்கரநாராயணன் வாழ்த்தி பேசினார். தகுதியுடைய மாணவர்களுக்கு பற்று அட்டையை (ஏடீஎம் கார்டு ) ஸ்ரீவைகுண்டம், வட்ட வழங்கல் அலுவலர் தாஹிர் அகமது வழங்கினார்.
நிகழ்ச்சிகளை முதுகலை வேதியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகளான பேச்சியம்மாள், சிவசங்கரி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவர்களுக்கு பற்று அட்டையை வழங்கும் தொடக்க விழாவை கல்லூரியின் தமிழ்ப் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் தேவிபிரசாத் ஏற்பாடு செய்தார். இவ்விழாவில் தமிழ்ப் புதல்வன் திட்ட பயனாளர்களான மாணவர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.