டிஸ்ட்ரிக்ட் கிளப், செஞ்சிலுவைஅலுவலகம் கொரோனா மையங்களாக மாற்றம்

0
945

கொரோனா நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் நாள்தோறும் 600 லிருந்து 800 பேர் வரை நோய் தொற்று உள்ளவர்களாக கண்டறியப்பட்டு வருகின்றனர்.

தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் குறைவாக உள்ளவர்களை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலான இடங்களை சிகிச்சை முகாம்கள் ஆக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.

பாளையங்கோட்டை அகில இந்திய வானொலி நிலையம் அருகே அமைந்துள்ள டிஸ்ட்ரிக்ட் கிளப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு சர்ச்சைகளால் மூடி சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் முதற்கட்டமாக கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக அந்த கட்டடத்தை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி சிகிச்சை முகாம்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அங்கு இயங்கி வந்த ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி, சார் ஆட்சியர் வேண்டுகோளின்படி காலி செய்யப்பட்டது. வளாகத்தின் மொத்த பகுதியையும் மாவட்ட நிர்வாகம் தன் கீழ் கொண்டு வந்து அந்தப் பகுதிகளை கொரோனா நோய் தடுப்பு பொருட்கள் இருப்பு மையமாக மாற்றியது. ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்கள் சேமிப்பு மையமாக உபயோகப்படுத்தப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை பகுதியில் இயங்கிவரும் செஞ்சிலுவைச் சங்க கட்டடத்தை சிகிச்சை முகாம் ஆக மாற்ற முடிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here