கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை பாஜக தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் அனுமதியின்றி அலுவலகத்துக்குச் சென்றனர். மேலும் அங்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளனர். இதற்கு பேரூராட்சி செயலாளர் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முக கவசம் அணியாமலும் கும்பலாக அலுவலகத்திற்குள் வந்து அனுமதி இல்லாமல் புகைப்படத்தை வைத்ததாக புகார் தெரிவித்தனர்.
இதனால் பாஜகவினர் மற்றும் செயல் அலுவலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் புகைப்படத்தை மாட்டி விட்டு அலுவலகத்துக்குள் கோஷம் எழுப்பினர்.இந்த சம்பவ வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பாஜகவினர் மீது செயல் அலுவலர் ரங்கசாமி ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். பின்னர் அத்துமீறி நுழைந்து புகைப்படம் வைத்தல், முக கவசம் அணியாமல் கும்பலாக வந்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பாஜக அமைப்பு சார் தொழிலாளர் மாவட்ட தலைவர் பாஸ்கரன்( 39 ) இளைஞரணி செயலாளர் முருகேசன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் இன்று காலை பாஸ்கரனை ஆலந்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.













