வீரப்பன் சகோதரர் மாதையன் விடுதலை செய்யக்கோரி அரசியல் கட்சி தலைவர்கள் தொல்.திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் ,பேரா.ஜவாஹிருல்லா மற்றும் திரைப்பட இயக்குனர்கள், சமூக ஆர்வலர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘ கோயம்புத்தூர் மத்திய சிறையில் வீரப்பனின் சகோதரர் மாதையன் மற்றும் அவருடன் சேர்ந்து ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனைச் சிறைவாசிகளாக இருந்து வருகின்றனர்.
இது போன்ற நீண்ட சிறைவாசம் என்பது சிறைவாசிகளின் நலனுக்கும். அவர்களது குடும்பத்தாரின் நலனுக்கும் மட்டும் எதிரானது அல்ல. சிறைவாசிகளின் மறுவாழ்வு என்கிற அரசின் கண்ணோட்டத்திற்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது.
இந்த சிறைவாசிகளின் முன் விடுதலைக் குறித்து அவர்கள் தண்டனை பெற்ற வழக்கினைக் காரணமாக வைத்து அறிவுரைக் குழுமம் மற்றும் இதர குழுமங்கள் பரிசீலிப்பதில்லை என்பது அதிர்ச்சிகரமாக உள்ளது.
சிறைவாசிகளின் விடுதலை குறித்துத் தமிழகத்தின் சிறைத்துறை அவ்வப்போது வெளியிடுகின்ற அரசாணைகள், சில குற்றங்களுக்குத் தண்டனை பெற்றவர்கள் மட்டும் முன் விடுதலைக்கு (Premature Release) தகுதியானவர்கள் என்றும், மற்ற சில குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள் முன்விடுதலைப் பரிசீலனைக்கே தகுதியற்றவர்கள் என்றும் காட்டப்படுகிற பாகுபாடு, இது போன்ற நீண்ட சிறைவாசங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.
இந்தச் சிறைவாசிகளின் முன் விடுதலை தொடர்பான இத்தகைய பாகுபாடு என்பது, சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிரானது மட்டுமல்லாமல், சிறைவாசிகள் மறுவாழ்வு பெறுகின்ற கண்ணோட்டத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானதாக உள்ளது.
மேலும் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை என்பது அவர் சிறையில் வாடும் காலத்தின் அடிப்படையில் முடிவு செய்வதற்குப் பதிலாக, அவர் தண்டனை பெற்றுள்ள வழக்குப் பிரிவுகளின் அடிப்படையில் முடிவு செய்வதென்பது மனிதநேயத்தையும்,, சிறைவாசியின் விடுதலை குறித்தான நம்பிக்கையையும் தகர்ப்பதாக உள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433ஏ,ஆயுள் தண்டனை என்பதைக் குறைந்த அளவு 14 ஆண்டுகள் என்றே வரையறுத்துள்ளது. தவிரவும், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை ஏற்கெனவே வழங்கியுள்ளசில தீர்ப்புகளில் சாதாரண ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை 10 ஆண்டுகள் கழித்துப் பரிசீலிக்கலாம் என்றும், முன்விடுதலையைப் பரிசீலனைக்கு உட்படுத்த முடியாத பிரிவுகளில் தண்டனை பெற்ற ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக் குறித்து 14 ஆண்டுகள் கழித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன.
மேலும்.வீரப்பனின் சகோதரர் மாதையன் சார்பாக முன் விடுதலை வேண்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கடந்த 03.10.2017 அன்று கோரிக்கையைப் பரிசீலித்து முடிவு செய்திடத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.’என்றாவது ஒருநாள் நாம் விடுதலை ஆவோம்’என்ற நம்பிக்கை நிறைவேறாத சூழ்நிலையில்,
நீண்ட ஆயுள் சிறைவாசியின் மனநிலை பெருத்த பாதிப்புக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகும் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் உணர்ந்து அவர்களின் விடுதலை பற்றி பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் சிவில் உரிமைக் கழகம், ( PUCL ), மக்கள் கண்காணிப்பகம், ( People’s Watch ), தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்,சோகோ அறக்கட்டளை ஆகியவை இந்த கூட்டறிக்கை விடுத்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.














