கோவையை அடுத்த போத்தனூர் செட்டி பாளையத்தில் வங்கி ஏ.டி.எம். ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம். முன்பு நேற்று இரவு 10 மணி அளவில் ஒரு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து நின்றது.
இதற்கிடையே அங்கு வந்த 2 பேரில் ஒரு வர் ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே நின்று கொண்டார். மற்றொரு நபர் ஏ.டி.எம். மையத்திற்கு உள்ளே சென் றார். அவர் திடீரென்று ஏ.டி.எம். எந்திரத்தை கள்ளச்சாவி போட்டு திறக்க முயன்றார்.
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் திறக்க முயன்ற தகவல் மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றது. உடனே அவர்கள் கோவை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனால் உஷாரான போலீசார் செட்டிப்பாளையம் போலீசாருக்கும், ரோந்து பிரிவு போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து செட்டிப்பாளையம் போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த 2 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கண்சாலி கிராமத்தைச் சேர்ந்த காலித் (28), ஷகில் (18) என்பதும், அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ளச்சாவி போட்டு பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? இவர்கள் இதற்கு முன் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.













