கோவில்பட்டி அன்னை தெரசா நகர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் சண்முகராஜ்(63). தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மின் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுப்புலட்சுமி (62). இவர்கள் வீட்டில் முன்பகுதியில் குழாய் மற்றும் இரும்பு சீட்டுக்களான கூரை உள்ளது. இதில், விளக்கு அமைப்பதற்காக வயரிங் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நண்பகல் முதல் கோவில்பட்டி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் சண்முகராஜ் காயப் போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக இரும்பு கூரைக்கு கீழ்ப் பகுதிக்கு வந்தார். அப்போது அவர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அவரது மனைவி சுப்புலட்சுமி அவரை காப்பாற்ற அங்கு வந்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து கோவில்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் விசாரணையில், இரும்பு கூரையில் செய்யப்பட்டிருந்த மின் வயரில் மின்கசிவு காரணமாக கணவன் மனைவி இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







