நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் உறுமன்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.பாத்திமா, மு.பாத்திமா,ரஹ்மத்துல்லா,
பேச்சித்தாய், கனி ஆகியோர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 23 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற சம்சு நிஷாவின் முகவரான அவரது கணவர் அப்துல் காதருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்.
அதில், ‘ எங்கள் ஊராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கள்ளிக்குளம் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்ட போது முறைகேடு நடந்துள்ளது. செல்லாத வாக்குகளை ஒதுக்கியதில் தவறு செய்தனர். ஒவ்வொரு சுற்றிலும் எண்ணிக்கை முகவர்களிடம் கூறப்படவில்லை.சந்தேகத்துக்குரிய எண்ணிக்கையை பல முறை ஆட்சேபித்தும் மறு எண்ணிக்கை நடத்தவில்லை. தபால் வாக்குகள் பதிவாகியும் அவை எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
இந்த முறைகேடுகள் குறித்து நாங்கள் முறையிட்டும் புகாரை பெறப்படவில்லை.
எனவே, முறைகேடாக எண்ணப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவை நிறுத்திவைக்கவேண்டும். மறு எண்ணிக்கை நடத்தவேண்டும். இல்லையேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாங்கள் பதவி விலகுவோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.
’மாவட்ட தேர்தல் அலுவலர் முதல் மாநில ஆணையர் வரை புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்’ என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.







