‘சமத்துவமற்ற உலகில் மனநல மருத்துவம்’ என்பது இந்த ஆண்டின் உலக மன நல தின ஸ்லோகம். அனைவருக்கும் பொது மருத்துவம் போல் மனநல மருத்துவமும் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்பதே இந்த முழக்கத்தின் நோக்கம்.
மனநல தினத்தையொட்டி பாளையங்கோட்டை வ உ சி மைதானம் முதல் சினேகா மனநல மருத்துவமனை வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இது குறித்து பேசிய பிரபல மனநல மருத்துவர் ‘சினேகா ‘ பன்னீர்செல்வம் ‘மனநல மருத்துவம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பணம் படைத்தவர்களுக்கு சிகிச்சை கிடைக்கிறது, ஏழைகளுக்கு கிடைக்காமல் போகிறது.நகரத்தில் இருப்பவர்கள் மருத்துவ வசதி காரணமாக சிகிச்சை பெறுகிறார்கள், கிராமத்தில் வசதியின்மை காரணமாக சிகிச்சை பெற முடியவில்லை. அமெரிக்க மக்களுக்கு கிடைக்கும் மருத்துவம் ஆப்ரிக்கர்களுக்கு கிடைப்பதில்லை.

தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவர்கள் இல்லை. விரைவில் அங்கு மருத்துவர்களை நியமிக்க வேண்டும், மனநல ஆலோசகர் களையும் பணியமர்த்த வேண்டும்.
கொரோனா காலத்தில் மனநலப் பிரச்சனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் மனநல மருத்துவரிடம் போவது களங்கம் என்பது போன்ற கருத்து உள்ளது. இந்த மனநிலையும் மாற வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய மருத்துவர் சங்க மருத்துவர்கள், நெல்லை, குமரி, தூத்துக்குடி மனநல மருத்துவர்கள், நெல்லை சிட்டி லயன்ஸ் கிளப், சைக்கிள் கிளப் உறுப்பினர்கள், மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.








