அரசு அலுவலகங்களுக்கு ஞாயிறு விடுமுறை விடப்படுகிறது, அது நியாயம். அரசு பஸ்களுக்கு ஞாயிறு விடுமுறை உண்டா?உண்டு என்கிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திசையன்விளை பணிமனை..
இங்கிருந்து நெல்லை வரை என்ட் டூ என்ட் பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. என்ட் டூ என்ட் என்பதே சட்டவிரோதமான மோசடி போக்குவரத்து என்னும் நிலையில், இன்னும் இடைநில்லா பேருந்துகளை இயக்கி குழப்பிக் கொண்டிருக்கும் அரசு போக்குவரத்து கழகம் இப்போது அதிலும் சிக்கலை உருவாக்குகிறது.
திசையன்விளை – திருநெல்வேலி என்ட் டூ என்ட் பேருந்து நினைத்த நேரத்தில் நிறுத்தப்படுகிறது.
இன்று காலை 8 மணி முதலே திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் அந்த பஸ்சை எதிர்பார்த்து 50க்கு மேற்பட்டவர்கள் காத்திருந்தனர். இதில், அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாய்,எட்டே காலுக்கும் எட்டரைக்கும் செல்லும் பஸ்களை விட்டவர்கள் அதிகம். ஆனால் பஸ் வரவில்லை.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தவர்கள் வேதனையுடன் அடுத்து வந்த ஒன்பதே கால் எஸ். எப்.எஸ் பேருந்தில் ஏறி புறப்பட்டனர்.
விசாரித்ததில், இப்படி அடிக்கடி இந்த என்ட் டூ என்ட் பேருந்து பணிமனை மேலாளர் இஷ்டப்படி நிறுத்தப் படுவதாக கூறப்படுகிறது. இதை போக்குவரத்து கழக அதிகாரிகள் அல்ல, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கவனிக்கவேண்டும் என்பதே பயணிகள் எதிர்பார்ப்பு.









