நாங்குநேரி தொகுதியில் கடந்த சில தடவைகளாக வெளியூர்க்காரர்களே எம்.எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது தொகுதிக்காரர்களின், குறிப்பாக காங்கிரசாரின் ஆதங்கமாக இருக்கிறது.
அதனால், வெளிவேட்பாளர்களை இறக்குமதி செய்தது யார், எப்போது என்பதை ஆராயவேண்டியுள்ளது. கடந்த 1989 வரை தொகுதிக்காரர்களே எம்.எல்.ஏக்களாக இருந்தனர். சங்கர் ரெட்டியார், ஜான் வின்சென்ட், ஆச்சியூர் மணி என அதுவரை உள்ளூர்க்காரர்களை அலங்கரித்த சட்டமன்ற உறுப்பினர் பதவி முதன்முறையாக வெளியாருக்கு செல்ல வித்திட்டவர் ஜெயலலிதாதான். 1991ல் தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்தை சேர்ந்த நடேசன் பால்ராஜை இங்கு நிறுத்தினார்.
இப்போது பேசப்படுவதுபோல், அவர் செல்வம் மிகுந்தவர் என்பதாலேயே செல்வாக்கு மிகுந்தவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு வேட்பாளரானார். பின்னர் அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அதையடுத்து உள்ளூர்க்காரரான 1996ல் எஸ்.வி. கிருஷ்ணன் வெற்றிபெற்றார்.
அதன்பிறகுதான் பிரச்சினை உருவானது. வசந்தகுமார் 3 முறை போட்டியிட்டு 2 முறை வென்றார். எர்ணாவூர் நாராயணன் ஒருமுறை வென்றார். இவர்கள் இருவரும் பக்கத்து மாவட்டக்காரர்கள் என்றாலும், சென்னையிலேயே வசித்துவந்தவர்கள் என்பதால் விமர்சனம் எழுந்தது. இப்போது மீண்டும் சென்னைவாசியான ரூபி மனோகரன் காங்கிரஸ் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது முணுமுணுக்க வைத்துள்ளது.