காரைக்குடி தெற்கு வீதியை சேர்ந்த வாசுதேவன் மகன் அரிகிருஷ்ணன்(27). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பரான காரைக்குடி கோட்டையூரைச் சேர்ந்த விக்கி (28) ஆகியோருடன் காரில் நேற்று திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனிபட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் (25) காரை ஒட்டினார்.
திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் தங்களது காரில் கன்னியாகுமரி சென்றனர். இன்று மாலையில் காரைக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கயத்தாறு அருகே அரசன்குளம் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஊர் பெயர் பலகை கான்கிரீட் தூண் மீது மோதியது.
இதில், விக்கி (28), அரிகிருஷ்ணன் மனைவியின் தாத்தா கணபதி (88) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அரிக்கிருஷ்ணன், அவரது தாய் சீதா (53), மனைவி திவ்யபாரதி (27), மகள் கிருபாலனி (2), திவ்யபாரதியின் தாய் காளியம்மாள்(53), கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய 6 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





