கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது பெண் தொழிலதிபர் சில ஆண்டுகள் தொழில் விஷயமாக வெளி நாட்டில் வாழ்ந்து வந்தார். பின்னர் கோவைக்கு திரும்பி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
புதிதாக தொழில் துவங்க வேண்டும் என்பதற்காக தன்னை பற்றிய விபரங்களை அந்தப் பெண் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் ஷர்மா (49 )என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். மேலும் தான் பைனான்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிவதாகவும் கூறி அறிமுகப்படுத்தியுள்ளார்.
தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறி அந்தப் பெண்ணிடம் பழகி உள்ளார். இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவைக்கு வந்த ஆனந்த் சர்மா கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்
.அப்போது பெண் தொழில் அதிபரை சந்தித்து ஆனந்த் சர்மா தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்றும் பெண் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த பெண் தொழிலதிபரை கட்டாயப்படுத்தி பாலியல் உறவிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஆனந்த் சர்மாவிற்கு இதேபோல வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதும் பெண் தொழிலதிபருக்கு தெரியவந்தது. மேலும் ஆனந்த் சர்மாவிற்கு விவாகரத்து ஆகவில்லை என்பதும் தெரிய வந்ததை அறிந்த பெண் தொழிலதிபர் அதிர்ச்சி அடைந்தார் .இதுகுறித்து அவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின்பரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












