தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன் (42). சிப்காட் வளாகத்துக்குள் தேநீர்க்கடை நடத்திவந்தார். இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன் தினம் கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். நேற்று மீளவிட்டான் ரயில் நிலையத்தையடுத்த காட்டுப் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் அவர் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில் 1998ஆம் ஆண்டு கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அழகு என்பவர் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து கொலையில் ஈடுபட்டதாக சண்முகராஜபுரத்தை சேர்ந்த தூத்துக்குடி மத்திய பாக போலீஸ் நிலைய ஏட்டு பொன் மாரியப்பனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவரே தனது தாய் மாமனான அழகு கொலையில் 4ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட லூர்து ஜெயசீலனை கிருஷ்ணராஜபுரம் ரவுடி மோகன்ராஜ் மூலம் மது குடிக்க காட்டுப்பகுதிக்கு அழைத்துவந்து, இருவருமாக சேர்ந்து அவரை கொன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மோகன்ராஜையும் தனிப்படையினர் கைது செய்தனர். இவர் பிரபல ரவுடி பட்டுராஜ் கோஷ்டியை சேர்ந்தவர்.