நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகராஜன். தச்சு தொழிலாளி. சில அடிதடி வழக்குகள் இவர் மீது உள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் திடீரென வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை . இந்நிலையில் அவர் நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை சிலர் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் . மேப்பநாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் அங்கு கிடந்த ரத்தமாதிரி உள்ளிட்ட தடயங்களை சேகரித்துக் கொண்டனர். பின்னர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
உடல் கிடந்த பகுதியில் மதுபாட்டில்கள் கிடப்பதால் நண்பர்கள் யாரேனும் அழைத்து சென்று கொலை செய்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. விசாரணையில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியபோது யார் ரவுடி என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தானே பெரிய ரவுடி என்று மார் தட்டிய மகராஜனை அவருடைய நண்பர்களான சாம் (26), மகேஷ் (27), ஜான்சன் (27), நவீன் (20) ஆகிய 4 பேர் கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.