நெல்லை மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி , பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதா’புரம் , அம்பாசமுத்திரம் ஆகியஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடக்கிறது.
ஐந்து தொகுதிகளிலும் 13 லட்சத்து 58 ஆயிரத்து 148 வாக்காளர்கள் உள்ளநிலையில் இந்த தேர்தலில் 9 லட்சத்து 3 ஆயிரத்து 770 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் . மொத்தம் 66.54 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.அதை பாஜக, காங்கிரஸ், அதிமுக , திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 76 வேட்பாளர்கள் பங்கிட உள்ளனர் .
வாக்கு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவம் , ஆயுதப்படை காவலர்கள் .உள்ளுர் போலீசார் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையத்தை சுற்றி 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் 2500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் தொடர் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தேவையில்லாமல் சுற்றும் நபர்களை கைது செய்ய காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மைய வளாகத்தை சுற்றி இரண்டு கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. 8.30 மணிக்கு பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு தொகுதி வாரியாக வாக்குபதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண்பார்வையாளர் உள்ளிட்ட 3 அதிகார்கள் இருப்பர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 30 சுற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் குறைந்தபட்சமாக 26 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாங்குநேரி தொகுதியில் 29 சுற்றும் பாளையங்கோட்டை தொகுதியில் 28 சுற்றும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 27 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்வோர் செல்போன், தண்ணீர் பாட்டில் போன்றவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது., அதுபோன்று கொரோனா தடுப்பு விதிமுறைகளும் கடுமையாக பின்பற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.









