நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து மனோ ( 27) பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போது அடித்து கொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறை கண்காணிப்பாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், முத்துமனோ குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 6 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . பல்வேறு அமைப்பினரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழர் உரிமை மீட்பு களம் அமைப்பினர், ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமையில் நேற்று இரவு பாளையங்கோட்டை திருவனந்தபுரம் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட 19 பேரை கைது செய்தனர்.

முத்துமனோ கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு, அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.









