மான் வேட்டை: சல்மான்கான் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

0
1169

பிரபல இந்தி நட்சத்திரங்களான சல்மான் கான், சைஃப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ஹம் சாத் சாத் ஹே என்ற இந்தி பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர். அப்போது அங்குள்ள காட்டில் வேட்டைக் குச் சென்றதாகவும், இதில் அரிய வகை மான்களை நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், சல்மான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. வழக்கில் இருந்து சைஃப் அலிகான், தபு, சோனாலி உட்பட 5 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது. சல்மான் கான் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. அன்றே சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, ஜோத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாளை சல்மான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் ஒருமுறை கூட சல்மான் கான் ஆஜராகவில்லை என்பதால், நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், நாளை சல்மான் கான் ஆஜர் ஆவதை அவரது தரப்பு வழக்கறிஞர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கேட்டுக்கொண்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here