ஒவ்வாமை ஏற்படுத்தும் ஐபோன்: புதிய சர்ச்சையில் ஆப்பிள் நிறுவனம்

0
712

அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் புதிய ஐபோன் அறிவிப்புகளுடன், முந்தைய வெளியீடான ஐபோன் எக்ஸ்.ஆர் , ஐபோன் 8 சீரிஸ் உள்ளிட்டவற்றின் விலைகளை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

சிலருக்கு சில காட்சிகள், வடிவங்களை கண்டால் உடனடியாக ஒவ்வாமை ஏற்படும் என்கிறது மனநல மருத்துவம். அப்படியான ஒரு வகை ஒவ்வாமைதான் ட்ரைஃபோபியா என்கிற பிரச்சினை.

திரளாக இருக்கும் வட்டவடிவிலான ஓட்டைகள் போன்ற அமைப்பை கொண்டுள்ளவற்றை பார்த்தால் ஏற்படும் ஒருவித பதட்டம், பய உணர்ச்சியைத்தான் ட்ரைஃபோபியா ஒவ்வாமை என்கிறார்கள்.

குறிப்பாக தோலில் ஏற்படும் தொற்று நோய்களின் வடிவமாக இருப்பதால், இந்த அச்சம் ஏற்படலாம் என மனநல மருத்துவர்கள் சொல்லும் நிலையில், இந்த அலர்ஜி வடிவத்துக்குள் புதிய ஐபோன்கள் சிக்கிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.

புதிய ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களையும் தாண்டி, இந்த புதிய வகை வடிவமைப்பிற்கு ட்ரைஃபோபியா ஒவ்வாமை உள்ளவர்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.

புதிய ஐபோன்களில் இரண்டு மற்றும் மூன்று கேமராக்கள் கூட்டாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த ஒவ்வாமையை கிளறி உள்ளதாக அவர்களின் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த போபியா உள்ளவர்களில் பலருக்கு அது தங்களுக்கு இருப்பதே கூடத் தெரியாது என்பதால், அந்த மனநிலை கொண்டவர்கள் ஐபோன் 11 வரிசையை வாங்குவதற்கு தயக்கம் காட்டலாம் என்கிற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

ட்ரைஃபோபியா எச்சரிக்கை குறியீட்டினை ஐபோன் 11 வரிசை போன் அட்டை பெட்டிகளில் இடம்பெற செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், புதிய சர்ச்சை ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here