சாத்தான்குளம் இட்ட மொழி சாலை பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் மகன் ஜெபஸ்டின் தினகரன் (37) திசையன்விளையில் இரு சக்கரம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 13ஆம் தேதி இவரது சகோதரர் கிருபாகரன் பைக் விஜயநாராயணம் அருகே பழுதாகிவிட, தனது பைக்கில் சென்று அவரது பைக்கை தள்ளிக் கொண்டு வந்துள்ளார். திசையன்விளைக்கு வந்த போது பின்னால் காரில் வந்த திசையன்விளையைச் சேர்ந்த டாக்டர் பாலகுமார், பைக்கை இடிப்பது போல் ஒட்டி வர, ஜெபஸ்டின் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகுமார், தனது காரால் ஜெபஸ்டின் பைக்கை இடித்து தள்ளியதோடு, அவரது அண்ணன் கிருபாகரன் கால் மீது காரை ஏற்றியுள்ளார்.
இதனால் ஜெபஸ்டின் கார் மீது கல்லெறிய, மீண்டும் காரை நிறுத்திவிட்டு ஜெபஸ்டினை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஜெபஸ்டின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திசையன்விளை போலீசார் டாக்டர் பாலகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.









