பல்வேறு இடங்களில் திருடிய ம.பி. இளைஞர் கைது- 41 பவுன் நகை மீட்பு

0
320

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உணவகத்தில் நிறுத்தியிருந்த பேருந்தில், பயணியின் கைப்பையில் இருந்து சுமார் 41 பவுன் தங்க நகையை திருடிய ம.பி. இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா ஜெயகுமார் (59). தனியார் கல்லூரி உதவி பேராசிரியை. இருவரும் கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் சென்றனர். இப்பேருந்து கயத்தாறையடுத்த கரிசல்குளம் விளக்கில் சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டபோது இருவரும் உணவருந்த சென்றனர். அப்போது பேருந்தில் ஜூலியட் லதா ஜெயக்குமார் வைத்து சென்ற பை சுமார் 41 பவுன் தங்க நகையுடன் காணாமல் போயிருந்தது.இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிந்து உணவகத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர்.

இத்திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானமாமலை தலைமையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் தலைமை காவலர்கள் செல்லதுரை, கார்த்திக் ராஜா, ராமகிருஷ்ணன், முதல் நிலைக் காவலர் சரவணன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் திருட்டு வழக்கில் தொடர்புடையது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படையினர் மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டம் உமர் பான் அஞ்சல் கார்வான் ஜாகீர் பகுதியைச் சேர்ந்த ஜான் கியர் மகன் மக்சூட கான் (35) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரோடு அதே பகுதியைச் சேர்ந்த காடு கான் என்ற மைதன் கான், ராபிக் ஆகியோருக்கும் திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து மக் சூட் கானிடமிருந்து உணவகத்தில் நிறுத்தி இருந்த பேருந்தில் பயணியின் கைப்பையில் இருந்த சுமார் 41 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்தனர். மற்ற இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து கோவில்பட்டி காவல் உதவி கண்காணிப்பாளர் நீல் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், இவ் வழக்கில் தொடர்புடைய மூன்று பேரும் கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒட்டன்சத்திரம், அரவக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, வத்தலக்குண்டு மற்றும் கயத்தாரில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

” பொதுமக்கள் பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்யும்போது விலை உயர்ந்த பொருட்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், அத்தியாவசிய தேவைக்காக வாகனத்தில் இருந்து இறங்கும் பொழுது தாங்கள் கொண்டு வந்த விலை உயர்ந்த பொருட்களுடன் கூடிய பையை கையில் எடுத்து வர வேண்டும், பொதுமக்கள் வெளியூருக்கு செல்லும் பொழுது விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும், பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், மேலும் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கு குடியிருப்பு மற்றும் பிரதான சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முன்வர வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியூர் செல்ல நேர்ந்தால் தாங்கள் அருகே உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்த தனி படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் வெகுமதி வழங்க பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here