கடந்த 13 ஆண்டுகளாக தாமிரபரணி பராமரிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில், வருகிற 2024 பிப்ரவரி முதல் ‘மாதம் ஒரு கிலோ மீட்டர்’ தூய்மை பணி நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன் முன்னோட்டமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி தன் பயணத்தை நிறைவு செய்யும் புன்னைக்காயல் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலத்தில் இருந்து புன்னைக்காயல் வரையிலான 2.5 கி. மீ. தூய்மை பணியை இன்று தொடங்கினர்.

திருச்செந்தூர் கோட்டாட்சியர் குரு சந்திரன், தாசில்தார் வாமனன் ஆகியோர் பணியினை தொடங்கி வைத்தனர்.
இதில், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கப் பொதுச் செயலாளர் இதழாளர் அய்கோ மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏரல் ஜெயபாலன், மணிவண்ணன், பூபாலன், வருவாய் ஆய்வாளர் சித்தர் பாபு, கிராம நிர்வாக அலுவலர் கனகரத்தினம், சேர்ந்தபூமங்கலம் ஊர் பிரமுகர்கள் சரவண மாறன், துரை, கிருதாத்தனன்,ரமேஷ், கோபி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தினமும் 30 களப் பணியாளர்களுடன் தூய்மைப்பணி இன்னும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று தாமிரபரணி பாதுகாப்பு இயக்கப் பொதுச் செயலாளர் அய்கோ தெரிவித்தார்.
சேர்ந்தபூமங்கலம் முதல் புன்னைக்காயல் வரை ஆற்றின் கரை சரி இல்லாமல் இருப்பதால், அதை பலப்படுத்தி, உட்புறம் அலைகற்கள் பதித்து, ஒரு படித்துறையும் அமைத்து தருமாறு தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
.