பாதுகாப்பு மிகுந்த கிராமத்து நீர் நிலைகளையே ஒரு கை பார்த்து விடும் ஆக்கிரமிப்பாளர்கள் நகரத்து நீர்நிலைகளை சும்மா விடுவார்களா?
அப்படித்தான் நெல்லை மாவட்டத்தின் மலை சூழ்ந்த களக்காடு ஊரில் அமைந்துள்ள குடிதாங்கிக் குளத்தையும் ஆக்கிரமித்து குறுக்கப் பார்க்கிறார்கள். இதை செய்பவர்கள் தனி நபர்கள் என்றால் கூட மன்னிக்கலாம். ஆனால் களக்காடு நகராட்சியே ஊருக்கு நீர் வளத்தை கொடுக்கும் இந்த குளத்தை நடைபாதை அமைப்பதாக கூறி சுருக்கி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக, குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் நீர் வரத்து கால்வாயையும், நீர்ப் போக்கி கால்வாயையும் தூர்த்து விட்டனர். குளத்தை மராமத்து என்ற பெயரில் ஆழப்படுத்துவதாக கூறி மண்ணை சுரண்டி, பல நூறு யூனிட் அளவு ஆளுங்கட்சி பிரமுகர்களின் நிலங்களுக்கு சட்டவிரோதமாக கடத்தி விட்டதாக மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் சித்திக் அஸிஸுர் ரஹ்மான் கூறுகிறார் . ” முறையான டெண்டர் இல்லை. கணக்கு வழக்குகள் இல்லை. வருவாய் துறை அனுமதி இல்லை. பாஸ் நடைமுறை இல்லை. களக்காடு நகராட்சி ஆணையர் துணையுடன் இந்த கனமவளக் கொள்ளை நடைபெற்றது” என்கிறார்.
குடிதாங்கி குளத்தின் அளவை எவ்விதத்திலும், எந்தத் திட்டத்திலும் குறைக்கக் கூடாது என்ற உத்தரவை பெற்ற பின்பும், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நகராட்சி நிர்வாகம் குளத்தங்கரையில் நடைபாதை அமைப்பதாக அனைத்துக் கட்சியினரும் குற்றச்சாட்டுகின்றனர்.

மேலும், நகராட்சியின் அக்கறையின்மையால் குப்பைகளை கொட்டி இந்த குடிதாங்கி குலத்தை குப்பை தாங்கி குளமாக மாற்றி வருகிறார்கள் 3. 77 ஹெக்டேர் பரப்புள்ள குளத்தில் பேருந்து நிலையத்தை அமைத்து3.27 ஹெக்டேர் பரப்பாக குறைத்து விட்டனர். இனி,கொஞ்சம், கொஞ்சமாக தூர்த்து நகரின் குடிநீர் ஆதாரமாகவும் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசனமாகவும் விளங்கும் இந்த குளத்தை இல்லாமலே ஆக்கி விடுவார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்காக, சில நாட்களுக்கு முன்பு அங்கு அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.







